Skip to content
Home » அரியலூர் கல்லங்குறிச்சி வரதராஜபெருமாள் கோயில் தேரோட்டம்….விமரிசையாக நடந்தது

அரியலூர் கல்லங்குறிச்சி வரதராஜபெருமாள் கோயில் தேரோட்டம்….விமரிசையாக நடந்தது

  • by Senthil

அரியலூர் கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டத்தில் கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோசத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவில் தென்னகத்து திருப்பதி இன்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.  இக்கோவிலின் ஆண்டு பெருந்திருவிழா கடந்த 30 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் மற்றும் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பல்வேறு வாகனங்களில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று  காலை நடைபெற்றது. கலியுக வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவிந்தா கோவிந்தா என்ற கோசத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து  இழுத்து சென்றனர். இத்தேரோட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இக்கோவிலில் பெருமளவில் விவசாயிகள் தங்களது கால்நடைகள் நலமுடன் இருக்கவும் விவசாயம் செழிக்கவும் வரதராஜ பெருமாளை வேண்டிக் கொண்டு உழவுத் தொழிலை செய்வார்கள். இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டத்தின் போது தங்களது வயலில் விளைந்த தானியங்களை வரதராஜ பெருமாளுக்கு காணிக்கையாக கொண்டு வந்து செலுத்துவதும் கால்நடைகளை வரதராஜ பெருமாளுக்கு காணிக்கையாக அளிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் மூலம் தங்களது வேளாண்மையை வரதராஜ பெருமாள் காத்து வருகிறார் என்பது இம்மக்களின் நம்பிக்கையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!