மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று திருச்சியில் 5 தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இன்று பிற்பகல் 4 மணியளவில் அரியமங்கலம் காவல் நிலையம் அருகில் திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை ஆதரித்தும், மாலை 5 மணியளவில் லால்குடி தொகுதி திமுக வேட்பாளர் பாரி வள்ளலை ஆதரித்து கல்லக்குடி பகுதியிலும், மாலை 6 மணிக்கு ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் துரைராஜை ஆதரித்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் ராஜகோபுரம் முன்புறம், மாலை 7 மணிக்கு திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோயில் அருகில் திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் அமைச்சர் கே.என். நேருவை ஆதரித்தும், மாலை 8 மணிக்கு திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கே.கே.நகர் பகுதியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்தும் பிரச்சாரம் செய்கிறார்.
பிரச்சாரத்துக்கான ஏற்பாடுகளை மக்கள் நீதி மய்யம் கட்சியினர், திமுகவினர் செய்து வருகின்றனர்.
கமலஹாசனின் திருச்சி மாவட்ட பிரச்சார பயணத் திட்டத்தில் திமுக வேட்பாளர்கள் போட்டியிடும் மண்ணச்சநல்லூர், முசிறி தொகுதிகளும், தோழமைக் கட்சிகள் போட்டியிடும் துறையூர் (தனி), மணப்பாறை தொகுதிகளும் இடம் பெறவில்லை.
