Skip to content
Home » நாளை கர்நாடகாவில் ‘பந்த்’…தமிழக பஸ்கள் எல்லை வரை மட்டுமே இயங்கும்…..

நாளை கர்நாடகாவில் ‘பந்த்’…தமிழக பஸ்கள் எல்லை வரை மட்டுமே இயங்கும்…..

  • by Senthil

கர்நாடகத்தில் பருவமழை பொய்த்துப்போன நிலையிலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது. இதை கண்டித்து கர்நாடகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. மண்டியாவில் கடந்த 18-ந் தேதி விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். அங்கு விவசாயிகள் தொடர்ந்து தினமும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்து கர்நாடக நீர் பாதுகாப்பு குழு, கர்நாடக கரும்பு விவசாயிகள் சங்கம் ஆகியவை சார்பில் பெங்களூருவில் நேற்று முன்தினம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) கா்நாடகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்துள்ளார். நாளை நடைபெறும் இந்த போராட்டம் தீவிரமானதாக இருக்கும் என்றும் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளதால் பெங்களூருவில் இன்று இரவு முதல் நாளை இரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. முழு அடைப்பின் போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் கர்நாடகா முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.

இதனிடையே, நாளை கர்நாடகாவில் ‘பந்த்’ நடைபெறுவதால் தமிழக பேருந்துகள் எல்லை வரை மட்டுமே இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பெங்களூரு செல்லும் அனைத்து பேருந்துகளும் தமிழக எல்லையான அத்திப்பள்ளி வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் இரு மாநில எல்லை பகுதியில் சூழ்நிலையை பொறுத்து பேருந்து சேவை தொடரும் என்றும் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!