Skip to content
Home » கர்நாடக முதல்வர் தேர்வு… நாளை நடக்கிறது

கர்நாடக முதல்வர் தேர்வு… நாளை நடக்கிறது

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் 207 வேட்பாளர்களும், ஆம்ஆத்மி சார்பில் 217 வேட்பாளர்களும் போட்டியிட்டனர். ஒட்டு மொத்தமாக 2,430 ஆண்களும், 184 பெண்களும், ஒரு திருநங்கையும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டனர்.

தேர்தலில் 73.19 சதவிகித வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.  பெரும்பான்மைக்கு 113 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். இந்நிலையில், வாக்கு எண்ணும் பணிகள் காலை 8 மணிக்கு தொடங்கி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பெரும்பான்மை தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.பகல் 12 மணி  நிலவரப்படி, காங்கிரஸ்120 தொகுதிகளில் முன்னிலையில்இருந்தது. தனிப்பெரும்பான்மைக்கு 113 தொகுதிகளில் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் 119 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

பாஜக 72 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக கடந்த முறை 104 தொகுதிகளில் வெற்றிபெற்ற நிலையில் தற்போது 72 இடங்களில் மட்டுமே  முன்னணியில் உள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் 26 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மற்றவை 6 இடங்களில் முன்னிலையில் உள்ளன. முதன் முதலாக  சல்லகேரி தொகுதி ரிசல்ட் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரகுமூர்த்தி வெற்றி பெற்றார். அடுத்ததாக ஹசன் தொகுதில் மஜத வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  இங்கு ஸ்வரூப் வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் மாநில தலைவர் டிகே. சிவக்குமார்  கனகபுரா தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அமைச்சர்  அசோக்கை விட 6 மடங்கு வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார்.  சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது.  அதே நேரத்தில் பாஜகவில் இருந்து விலகி, காங்கிரசில் சேர்ந்து போட்டியிட்ட ஷெட்டர் தோல்வி முகத்தில் உள்ளார்.அதே நேரத்தில் பாஜகவில் இருந்து வந்து காங்கிரசில் போட்டியிட்ட  முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவடி  அதனி தொகுதியில் வெற்றிபெற்றார். இவரது வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இவர் 70% வாக்குகள் பெற்றார்.

முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா,  குமாரசாமி ,தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.  தமிழர்கள் அதிகம் வாழும் புலிகேசி தொகுதியில்  பகுஜன் சமாஜ் கட்சி முந்துகிறது. இங்கு பாஜக மூன்றாம் இடத்தில் உள்ளது.  தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா முன்னணியில் உள்ளார். தமிழக பாஜக பொறுப்பாளர் சிடி ரவி, சிக்மகளூர் தொகுதியில் பின்தங்கி உள்ளார்.

தமிழக ஐஏஎஸ் அதிகாரி அமுதாவின் கணவர்  சம்பு கல்லோலிகர். இவர் புதுகை கலெக்டராக பணியாற்றினார். பின்னர் தேர்தல் ஆணையத்திலும் பணியாற்றினார். கர்நாடக தேர்தலில் போட்டியிட விருப்ப ஓய்வு பெற்றார். காங்கிரஸ் சார்பில் சீட் மறுக்கப்பட்டதால்,  இவர் அங்குள்ள ரைபேக் தொகுதியில்  சுயேச்சையாக போட்டியிட்டார்.  தற்போது அவர் 2வது இடத்தில் உள்ளார். பாஜக அமைச்சரவையில் இடம் பெற்ற 8 பேர் தற்போது பின் தங்கி உள்ளனர்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி என்பது உறுதியாகி விட்ட நிலையில் இன்று   பிற்பகல் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் அகில இந்திய தலைவர்  மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் பெங்களூருவில் நடக்கிறது. மாலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் கர்நாடக காங்கிரஸ் அலுவலகத்தில் நடக்கிறது.

வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாதுகாப்புடன் பெங்களூருவில் உள்ள ஹில்டன், ஹயாத் ஓட்டல்களில் தங்க வைக்கப்படுகிறார்கள். நாளை முதல்வர் தேர்வு நடக்கிறது.  சித்தராமையா, டி.கே. சிவக்குமார் உள்பட பலர் முதல்வர் போட்டியில் உள்ளனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!