Skip to content
Home » கரூரில் போதை ஊசி தயாரித்து பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை… 6 பேர் கைது..

கரூரில் போதை ஊசி தயாரித்து பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை… 6 பேர் கைது..

கரூரில் கடந்த சில நாட்களாக பள்ளி கல்லூரி மாணவர்கள் சிலரின் செயல்பாடுகளில் சந்தேகத்துக்கு இடமான மாற்றம் ஏற்பட்டதை போலீசார் கண்காணித்து வந்துள்ளனர். இதில் வலி நிவாரண மாத்திரைகளை போதை ஊசியாக பயன்படுத்துவதாக வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவரை காவல் துறையினர் பிடித்து விசாரித்ததில், விஷால் கார்த்தி என்பவர் ஆன்லைன் மூலமாக வலி நிவாரண மாத்திரையை போதை ஊசியாக மாற்றுவதற்கான மருந்து பொருட்களை வாங்கி, நான்கு பேருடன் சேர்ந்து விற்பனை செய்தது தெரியவந்தது.

ஆன்லைனில் 10 மாத்திரைகள் அட்டையின் விலை 400 ரூபாய், ஒரு மாத்திரையை 200 ரூபாய்க்கு ஊசி மூலம் கைகளில் நரம்பு மூலமாக செலுத்துவதால் உச்சகட்ட போதை ஏற்படுகிறது.

இதனை விற்பனை செய்த வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவர் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததை அறிந்த கரூர் நகர காவல் துறையினர் ரகசிய விசாரணை மேற்கொண்டதில், ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த விஷால் கார்த்தி, ஆன்லைன் மூலமாக வலி மாத்திரை வாங்கி கொடுத்ததும், மேலும் இதில் தொடர்புடைய கரூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுரேந்திரன் (23), அலெக்சாண்டர் ( 23), இலியாஸ் (வயது 25), பிரபு (வயது 21) இவர்கள் மூலமாக இந்த போதை மாத்திரையை ஊசியாக மாற்றி கரூரில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்த திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.

இந்த போதை மாத்திரையை ஊசி மூலமாக பயன்படுத்துவதால் இதய நோய், மனநோய், உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. எனவே, என்டிபிஎஸ் போதை மருந்துகள் மற்றும் மனநோய் ஏற்படுத்தும் சட்டம் 1985 கீழ் வழக்கு பதிவு செய்து, 6 பேரையும் கைது செய்த கரூர் நகர காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் தொடர்ந்து கண்காணித்ததில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் கல்லூரி மாணவர் ஒருவரின் சட்டை பாக்கெட்டில் ஊசி இருந்ததை கண்டுபிடித்ததை தொடர்ந்து, விசாரணை மேற்கொண்டதில் இந்த ஆறு பேர் கொண்ட கும்பல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வலி நிவாரண மாத்திரையை போதை ஊசியாக கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. மேலும் அவர்கள் கையில் போதை ஊசி பயன்படுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளை மறைப்பதற்காக பச்சை குத்தி உள்ளனர்.

மேலும், கரூர் நகர காவல் ஆய்வாளர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும்பொழுது அவர்கள் சோர்வாக உள்ளார்களா? கைகளில் பச்சை குத்தியுள்ளார்களா? எதற்காக பச்சை குத்தியுள்ளார்கள் என்பது குறித்து பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!