Skip to content
Home » சென்னையில் வீரர், டில்லியில் பெட்டிபாம்பு…. அன்புமணி மீது திமுக காட்டம்

சென்னையில் வீரர், டில்லியில் பெட்டிபாம்பு…. அன்புமணி மீது திமுக காட்டம்

தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- என்எல்சி விரிவாக்கத் திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை என மத்திய நிலக்கரித்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி மாநிலங்களவையில் அறிவித்திருக்கிறார். அதுவும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி கேட்ட கேள்விக்கு அவ்வாறு எழுத்துப்பூர்வமான பதிலை தெரிவித்துள்ளார்.

என்எல்சி விவகாரத்தைப் பொறுத்தவரை, அந்த உழவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை அதிகரிப்பதாக இருக்கட்டும், உள்ளூர் பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக இருக்கட்டும், அனைத்திலும் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆணித்தரமாகக் குரல் எழுப்பியது திமுகதான். இப்போது ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, என்எல்சி நிர்வாகத்துடன், மத்திய மந்திரிகளுடன் பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி, இழப்பீட்டுத் தொகையை உயர்த்திக் கொடுக்க வைத்ததும் திமுக அரசுதான்.

கடந்த காலங்களில் வழங்கப்பட்ட இழப்பீட்டை விட அதிகமாக இழப்பீடு வழங்கியது மட்டுமன்றி, ஏற்கெனவே இழப்பீடு பெற்றவர்களுக்குக் கூட மேலும் கூடுதல் தொகை பெற்றுத் தந்த அரசு திமுக அரசுதான். எங்களின் முதல்-அமைச்சர் தான். இன்னும் கூட, உழவர்களின் உரிமைகளுக்காக, அவர்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டும் என்று அந்த மாவட்டத்தின் அமைச்சர் என்ற முறையில் முன்னின்று, உழவர்களுடன் அவர்களின் நலன்களுக்காக பேச்சுவார்த்தை நடத்தி, இந்த அரசின் நடவடிக்கைகள் மீதும், எங்கள் கட்சியின் தலைவரான முதல்-அமைச்சர் மீதும் உழவர்கள், இளைஞர்கள் நம்பிக்கையாக இருக்கிறார்கள்.

இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அன்புமணி ராமதாஸ் போராட்டம் என்ற பெயரில் போலீசார் மீது கல்வீசி, பொதுச் சொத்துகளை வழக்கம் போல் சேதப்படுத்தி, அமைதியாக இருக்கும் உழவர்களை, மக்களைத் தூண்டிவிட்டு இந்த அரசுக்கு எதிராக ஒரு சதித் திட்டத்தை உருவாக்கி வருகிறார். வட மாவட்டங்களில் உள்ள உழவர்கள், மக்களுக்குக் கிடைக்கும் மின்சாரத்தைத் துண்டித்து, எப்படியாவது இந்த மாவட்டங்களை, மாவட்டங்களின் முன்னேற்றத்தை இருட்டில் தள்ளி விட முடியாதா என்று துடிக்கிறார்.

ஒரு இடத்தில் “மண்ணையும் மக்களையும் காக்க எந்த எல்லைக்கும் செல்வோம்” எனவும், இன்னொரு இடத்தில், “நாங்கள் டில்லி அளவில் மட்டுமே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிறோம். தமிழகத்தில் இல்லை” என்றும் நாடகமாடுவது என்பதைக் கைவந்த கலையாக செய்து வருகிறார் அன்புமணி ராமதாஸ். சென்னையில் “வீராவேசம்” செய்யும் அன்புமணி ராமதாஸ், டில்லியில் கைகட்டி நின்று மத்திய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்?

டில்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மருத்துவக் கல்லூரி வழக்கா? அல்லது அந்த நிலுவையில் உள்ள வழக்கை வைத்து அமலாக்கத்துறை கைது செய்துவிடப் போகிறது என்ற கலக்கமா? இங்கே “மண்ணையும், மக்களையும் காப்போம்” என்றவர்டில்லியில் முகத்துக்கு நேராக, “என்எல்சி விரிவாக்கத் திட்டத்தைக் கைவிடமாட்டோம்” என்று மத்திய பாஜக மந்திரி, அதுவும் அன்புமணி ராமதாசே விரும்பி இடம்பெற்றுள்ள “டில்லி தேசிய ஜனநாயகக் கூட்டணியின்” மந்திரி அறிவித்த பிறகும், ஏன் எழுத்துப்பூர்வமாக மாநிலங்களவையில் தெரிவித்த பிறகும், பெட்டிப் பாம்பு போல் அடங்கி கிடப்பது ஏன்?

தைரியம் இருந்திருந்தால், அவர் சென்னையில் பேசுவதும், போராடுவதும் உண்மையென்றால், குறைந்தபட்சம் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பாவது செய்திருக்க வேண்டாமா? அதிகபட்சமாக “இனி நாங்கள் டில்லி அளவில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் இல்லை” என்று அறிவித்துவிட்டு விமானம் ஏறிச் சென்னைக்கு வந்திருக்க வேண்டாமா? அப்படியெல்லாம் அன்புமணி ராமதாஸ் அவசரப்படமாட்டார் என்று எங்களுக்கு தெரியும்.

ஏனென்றால் அப்படி அவசரப்பட்டால் மருத்துவக் கல்லூரி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை வந்து தன் வீட்டுக் கதவை தட்டும் என்பது அவருக்குத் தெரியும். அதனால்தான் மாநிலங்களவையில் மத்திய மந்திரி “கைவிரித்தும்” இவரால் அது பற்றி கைதூக்கி கேள்வி எழுப்ப முடியாமல் அமைதியாகி விட்டார். ஆகவே திருவாளர் அன்புமணி ராமதாஸ், வட மாவட்ட மக்களின் நலனுக்கும், உழவர்களின் உரிமைகளுக்காகவும் முதல்-அமைச்சர் ஓயாது உழைக்கிறார். மத்திய அரசுடன் போராடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இன்னும் மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த மண்ணையும், மக்களையும் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார் என்று நம்பியிருக்கும் உழவர்களை, வட மாவட்ட மக்களை, உங்களின் இது போன்ற “கபட நாடகங்கள்” மூலம் திசைதிருப்பி விட முடியாது என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!