Skip to content
Home » கோவையில் பேக்கரி கடைக்காரர் வீட்டில் திருட்டுபோன நகைகள் மீட்பு ….

கோவையில் பேக்கரி கடைக்காரர் வீட்டில் திருட்டுபோன நகைகள் மீட்பு ….

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கணபதி பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் டைல்ஸ் கடை மற்றும் பேக்கரி நடத்தி வருகிறார். இவர் கடந்த 26ம் தேதி குடும்பத்துடன் சிவகங்க்கைக்கு சென்று விட்டு 28ம் தேதி வீட்டிற்கு திரும்பி வந்து பார்க்கையில் வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரேம்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வீடிற்கு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த துணிகள் எல்லாம் களைக்கப்பட்டு நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கினர். மேலும் கோவை காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் கோவை கிழக்கு சரக உதவி ஆணையர் பார்த்திபன் மேற்பார்வையில் சரவணம்பட்டி காவல் ஆய்வாளர்

செந்தில்குமார் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் ஆரோக்கிய சாமியின் உறவினரான சித்தாபுதூர்வை சேர்ந்த சவரிமுத்து என்பவர் மகன் மரியம் அமுதம் (37) என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து 25 சவரன் தங்க நகை மீட்ட காவல்துறையினர் மரியம் அமுதமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் கணபதி வ உ சி நகர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் (36) மற்றும் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த யூசப் (47) என்பவர்களையும் சிசிடிவி கேமரா பதிவுகளில் ஆய்வு மேற்கொண்டு காரமடையில் பதுங்கி இருந்தவர்களை கைது செய்து நகைகளை மீட்டனர்.

இந்நிலையில் இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு சரவணம்பட்டி காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில் செய்தியாளர்களை சந்தித்த காவல் உதவி ஆணையர் பார்த்திபன் பொதுமக்களிடம் விழிப்புணர்வு தேவை எனவும் வீட்டை பூட்டி விட்டு செல்லுபவர்கள் அருகில் உள்ள காவல்துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும் முக்கியமாக தங்கள் வீடுகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் அதேபோல் தங்களது பகுதிகளை சந்தேகத்திற்கு இடமான நபர்களை கண்டால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!