Skip to content
Home » கும்பகோணம் கோயில் யானை மங்களம்…குளியல் தொட்டியில் குதூகலம்…. படங்கள்…

கும்பகோணம் கோயில் யானை மங்களம்…குளியல் தொட்டியில் குதூகலம்…. படங்கள்…

கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோயில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமக பெருவிழா தொடர்புடைய சிவாலயங்களில் முதன்மையான தலமாகும். பிரளய காலத்திற்கு பின் முதலாவதாக தோன்றிய கோயிலான இக்கோயிலில் அமுதகலச கும்பம் தங்கியதால் இத்தலம் கும்பகோணம் எனப்பெயர் பெற்றது. இந்தியாவிலுள்ள சக்திபீடங்களுக்கும் முதன்மையான சக்திபீடமாகி 72,000 கோடி சக்திகளுக்கு அதிபதியாக இக்கோயிலின் மங்களாம்பிகையம்மன் அருள்பாலிக்கின்றார்.

இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயிலுக்கு, கடந்த 1982ம் ஆண்டு காஞ்சி மகாபெரியவர் மங்களம் என்ற யானையை வழங்கினார்.
யானை மங்களத்திற்கு சளி பிரச்சனை இருப்பதால், கடந்த சில ஆண்டுகளாக யானையை புத்துணர்வு முகாமிற்கு அனுப்புவது கிடையாது. ஆனால் முகாமில் வழங்கும் உணவு, மூலிகைகள், உடற்பயிற்சிகள் கோயிலிலேயே வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 57 வயதாகும் யானை மங்களம், கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் பாசத்துடன் ஆசி வழங்குவதும், பழங்கள் கொடுத்தால்

வாங்கி சாப்பிடுவதுமாக இருப்பதால் இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் யானை மங்களத்தை பார்க்காமல் செல்ல மாட்டார்கள். மேலும் கோயில் பூஜை மற்றும் திருவிழாக்காலங்களில் இறைப்பணி செய்து பவனி வருகிறது.

இந்நிலையில் இக்கோயிலில் இருந்து வெளியில் எங்கும் செல்லாததால் யானை மங்களம் புத்துணர்ச்சியுடனும், ஆனந்தமாக இருப்பதற்காகவும், குளத்தில் நீராடுவது போல் நீராடிட வசதியாக கோயிலின் நந்தவனப்பகுதியான தென்கிழக்கு பகுதியில் யானை மங்களத்திற்காக புதிய யானை குளியல் தொட்டி கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு, கான்கிரீட் தளத்துடன் 5 அடி உயரத்தில் சுவர், 29 அடி நீளம் மற்றும் அகலத்துடன் ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் குளியல் தொட்டி கட்டப்பட்டும், பாதுகாப்பான இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டும், யானை மங்களம் நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக குளியல் தொட்டியை சுற்றிலும் 500 மீட்டருக்கு 14 நவீன மின்விளக்குகளுடன் அமைக்கப்பட்ட இந்த குளியல் தொட்டியை கடந்த ஜனவரி 23ம் தேதி தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கியதால் கடந்த சில நாட்களாக கும்பகோணம் மாநகரில் கடும் வெப்பம் நிலவி வரும் சூழ்நிலையில் புதிதாக கட்டப்பட்ட நீச்சல் குளத்தில் இந்த யானை ஹாயாக குளிக்க நாள்தோறும் யானை மங்களத்தை காலை, மாலை என இரு வேளையும் யானை பாகன் அசோக் என்பவர் குளியல் தொட்டியில் யானையை இறக்கி குதூகலமாக குளிக்க வைத்து வருகிறார். அதன்படி நேற்று நண்பகல் குளியல் தொட்டியில் யானை மங்களம் ஆனந்த குளியலிட்டு சிறு குழந்தையை போல மகிழ்ச்சியில் துள்ளி குதித்து விளையாடி குதூகலித்து மகிழ்ந்தது. அப்போது குளிப்பதற்கு முன் குளத்தில் இறங்க சற்று தயக்கம் காட்டிய மங்களம் யானை, குளிக்க தொடங்கியதும் கரையேற மனமின்றி குளத்திலேயே நீண்ட நேரம் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தது காண்போரை பரவசப்படுத்தியது. யானை ஆனந்தமாக குளியலிடும் காட்சியை கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும், சிறுவர்களும் அதனை ரசித்து ஆர்வத்துடன் செல்போனில் படம் பிடித்தும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!