Skip to content
Home » மயிலாடுதுறை சிறுத்தை குடந்தை பகுதிக்கு இடம்பெயர்ந்ததா? பரபரப்பு தகவல்

மயிலாடுதுறை சிறுத்தை குடந்தை பகுதிக்கு இடம்பெயர்ந்ததா? பரபரப்பு தகவல்

மயிலாடுதுறை  நகரில் கடந்த 2ம் தேதி இரவு  ஒரு சிறுத்தை நடமாட்டம் இருப்பது   கண்காணிப்பு காமிரா பதிவுகள் மூலம் தெரியவந்தது.  இதையடுத்து அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். பல்வேறு இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டு, கண்காணிப்பு காமிரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த சிறுத்தை ஒவ்வொரு நாளும்  இடம் பெயர்ந்துகொண்டே இருக்கிறது. இதுவரை  2 ஆடு, ஒரு பன்றியை அந்த சிறுத்தை அடித்து கொன்றுள்ளது.  8 நாட்கள் ஆகியும் இன்னும் அந்த சிறுத்தை பிடிபடவில்லை.

இந்த நிலையில் மயிலாடுதுறையில் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து நாகை மாவட்ட வன உயிரின காப்பாளர் அபிஷேக் தோமர்  ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் வீரசோழனாறு. நண்டலாறு மற்றும் மகிமலையாறு பகுதிகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று 8.4.2024 தேதியில் காஞ்சிவாய் கிராமத்தின் அருகிலுள்ள நண்டலாற்றின் நடுவில் சிறுத்தையின் காலடித்தடம் சிறப்பு குழுவினரால் கண்டறியப்பட்டது. அத்தகவலை அடுத்து வனத்துறை அலுவலர்கள், வனக்

கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழு உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்து தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இவ்விடத்திலிருந்து தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதி அருகில் இருப்பதால் தஞ்சாவூர் வனக்கோட்டத்தை சேர்ந்த வனப்பணியாளர்களும், காஞ்சிவாய் கிராமப்பகுதிக்கு வந்து களக்குழுவுடன் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

சிறுத்தையின் நடமாட்டம் பெரும்பாலும் ஆறு மற்றும் ஓடைகள் வழியாகவே இருப்பதாலும் அப்பகுதிகளில் உள்ள சிறிய மதகுகள், சிறு ஓடைகள், சிறு பாலங்கள், ஓடையில் உள்ள புதர்கள் ஆகிய இடங்களில் பகல் நேரங்களில் சிறுத்தை பதுங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாலும், நீர்வளத்துறை அலுவலர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களின் உதவியுடன் நீர்வழிப்பாதைகளின் வரைப்படங்களை ஆய்வு செய்தும் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடனும் சிறுத்தை இருப்பதற்கான சாத்தியக்கூறு உள்ள இடங்களை கண்டறிந்து அவ்விடங்களில் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையில் நண்டலாறு மற்றும் வீரசோழனாறு பகுதிகளில் சரியான இடங்களை கண்டறிந்து சிறுத்தை பிடிக்கும் கூண்டுகள் இடமாற்றம் செய்யப்பட்டு 6 இடங்களில் வைக்கப்பட்டது. இது தவிர 25 தானியங்கி கேமராக்களும் ஆறுகளிலும் ஓடைகளிலும், சிற்றோடைகளிலும் பொருத்தப்பட்டன. அத்துடன் சிறுத்தை ஏற்கனவே கண்டறியப்பட்ட மயிலாடுதுறை அருகே உள்ள காவேரி ஆறு ஒட்டிய பகுதிகளிலும் 19 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டன.

மேலும் வனத்துறையின் மூலம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சிறுத்தையின்
நடமாட்டம் குறித்தும் சிறுத்தையின் பொதுவான குணங்களை குறித்தும் அறிவுரைகளும்
விழிப்புணர்வுகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அச்சம் கொள்ள
வேண்டாமென்றும் இரவு நேரங்களில் அவர்களின் நடமாட்டத்தை குறைத்துக்கொள்ளுமாறும் குறிப்பாக, 10 வயதிற்குட்பட்ட குழந்தைககள் மற்றும் வயதுமுதிர்ந்தோர் வெளியில் தனியாக
விடவேண்டாம் என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில்9.4.2024 காலை காஞ்சிவாய் அடுத்த கருப்பூர் அருகில் நண்டலாற்றின் அருகில் சிறுத்தையின் எச்சம் புதியதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சிறுத்தையின் இடப்பெயர்ச்சி எவ்வாறு செல்கிறது, அதன் போக்கு எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் வனத்துறை அலுவலர்கள், வனஉயிரின ஆர்வலர்கள்/நிபுணர்கள் கலந்தாலோசித்தும் வரைபடங்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொண்டும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!