Skip to content
Home » ஒடிசா ரயில் விபத்து…. மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்த கடிதம்

ஒடிசா ரயில் விபத்து…. மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்த கடிதம்

ஒடிசாவில் ரெயில் விபத்து நடந்த இடம் சோக சுவடுகளை என்றும் சுமந்து கொண்டிருக்கும். அந்த இடத்தில் சிதறிக் கிடந்த பொருட்கள் ஒவ்வொன்றும் பல இதயங்களின் வலியையும், ஏக்கத்தையும் பிரதிபலிப்பதாக இருந்தது. தண்டவாளத்தின் சில அடி தூரத்துக்குள் ஒரு பயணியின் பை கிடைத்தது. அதில் ஒரு நோட் புக் இருந்தது. அதை பிரித்து பார்த்த போது மீட்பு குழுவினர் கண்களில்  கண்ணீர் கசிந்தது.

காரணம்….. அந்த நோட்டு புத்தகத்தில் இடம்பெற்று இருந்தது அனைத்தும் காதல் கவிதைகள். சிவப்பு, நீலம், பச்சை என்று பல வண்ணங்களில்  கவிதையாக  கடிதத்தை வடித்து இருந்தார். வங்காள மொழியில் எழுதப்பட்டிருந்த கவிதைகள் ஒவ்வொன்றும் காதலையும், காதலின் ஏக்கத்தையும் வெளிப்படுத்தியது.

‘சிறிய மேகங்கள் மழையை உருவாக்குகின்றன. சிறிய கதைகள் அன்பை உருவாக்குகின்றன’ என்று அந்த கடிதங்கள் நீள் கிறது. எழுதியவர் யார்? அவர் என்ன ஆனார்? என்பது தெரியவில்லை. அவரது காதலின் அடையாளமான கடிதங்கள் மட்டும் எஞ்சி நிற்கிறது.

குழந்தைகளுக்காக ஆசையாக வாங்கி வைத்திருந்த பொம்மைகள், உடைகள் சிதறி கிடந்தன. கிழிந்தும், சிதைந்தும் கிடந்த அவற்றின் மீது ரத்த கறைகள் படிந்து காணப்பட்டன. சிதறி கிடந்த பயணிகளின் உடமைகளை தன்னார்வலர்கள் சேகரித்து ஆங்காங்கே குவித்து வைத்துள்ளார்கள்.

பொம்மைகளும்,  உடைகளும் அந்த இடத்தில் சிதறி கிடந்ததால், அந்த கடிதத்தை எழுதியவர்  தனது மனைவிக்கோ, கணவருக்கோ  அந்த கடிதத்தை எழுதியிருக்கலாம், எழுதியவர் என்ன ஆனார், அவர் யார் என விசாரிக்கிறோம் என  மீட்புபணியில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்தனர்.

அந்த கடிதத்தை படித்தவர்கள் மனதில் தோன்றியதெல்லாம்,

‘எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்
ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம்’ என்ற பாடல் வரிகள் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!