Skip to content
Home » ரஷியா அனுப்பிய லூனா- 25 தோல்வி அடைந்தது ஏன்? பரபரப்பு தகவல்

ரஷியா அனுப்பிய லூனா- 25 தோல்வி அடைந்தது ஏன்? பரபரப்பு தகவல்

இந்திய விண்வெளி ஆய்வு மையமான ‘இஸ்ரோ’ நிலவை ஆய்வு செய்வதற்காக ‘சந்திரயான்-3’ விண்கலத்தை கடந்த மாதம் 14-ந் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதற்கு முன்பு எந்த விண்கலமும் வெற்றிகரமாக சென்றடையாத, நிலவின் தென்துருவத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கிய ‘சந்திரயான்-3’ விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கான இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.   இதனிடையே நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதில் முதல் இடத்தை பிடிப்பது யார் என்பதில் இந்தியா, ரஷியா இடையே போட்டி நிலவுகிறது. அந்த வகையில் இந்தியாவின் ‘சந்திரயான்-3’ விண்கலத்துக்கு போட்டியாக ரஷியா கடந்த 10-ந் தேதி ‘லூனா-25’ என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. ரஷியாவில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் எம்.எஸ்.-24 விண்கலம் ‘சந்திரயான்-3’ விண்கலத்துக்கு பல நாள் கழித்து விண்ணில் ஏவப்பட்ட போதிலும் ரஷிய விண்கலத்தை ‘சந்திரயான்-3’க்கு முன்பே நிலாவில் தரையிறக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தது ரஷிய விண்வெளி ஆய்வு மையமான ரோஸ்கோஸ்மோஸ்.

அதன்படி கடந்த 17-ந் தேதி நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் ரஷியாவின் ‘லூனா-25’ விண்கலம் வெற்றிகரமாக நுழைந்தது. தொடர்ந்து, படிப்படியாக சுற்றுப்பாதையை குறைக்கும் பணிகள் நடந்து வந்தன. அதன் தொடர்ச்சியாக ‘லூனா-25’ விண்கலம் இன்று (திங்கட்கிழமை) நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க இருந்தது. விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்குவதற்கான நடவடிக்கைகளை ரோஸ்கோஸ்மோஸ் மேற்கொண்டு வந்தது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ‘லூனா-25’ விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியதாக ரோஸ்கோஸ்மோஸ் நேற்று தெரிவித்தது. முன்னதாக விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறுதிக்கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், அதனால் விண்கலத்துடனான தொடர்பை இழந்ததாகவும் ரோஸ்கோஸ்மோஸ் கூறியிருந்தது. அதை தொடர்ந்து, விண்கலத்துடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த விஞ்ஞானிகள் தீவிரமாக முயற்சித்த நிலையில் ‘லூனா-25’ விண்கலம் கணிக்க முடியாத சுற்றுப்பாதையில் நகர்ந்து நிலவின் மேற்பரப்பில் மோதி நொறுங்கியதாக ரோஸ்கோஸ்மோஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் மூலம் 47 ஆண்டுகளுக்கு பிறகு நிலவை ஆய்வு செய்ய ரஷிய எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. கடந்த 1976-ம் ஆண்டு ரஷியாவை உள்ளடக்கிய சோவியத் ஒன்றியம் ‘லூனா 24’ விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. அதன் பிறகு ரஷியா சார்பில் முதல் முறையாக நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலம் நிலவில் மோதி நொறுங்கியது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!