Skip to content
Home » மகளிர் உரிமைத்தொகை… வாசலில் கோலமிட்டு வரவேற்க வேண்டும்…. துரைமுருகன் வேண்டுகோள்

மகளிர் உரிமைத்தொகை… வாசலில் கோலமிட்டு வரவேற்க வேண்டும்…. துரைமுருகன் வேண்டுகோள்

மகளிர் உரிமைத்தொகை நாளை  வழங்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் நடக்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இதனை தொடங்கி வைக்கிறார்.  திருச்சியில் அமைச்சர் நேரு இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக திமுக  பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் கழக அரசின் மிக முக்கியமான மக்கள் நலத்திட்டமான “கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்ட”மானது பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால், தமிழ்நாடு முழுமைக்கும் காஞ்சிபுரத்திலிருந்து தொடங்கி வைக்கப்படுகிறது.

கடுமையான நிதிச்சூழலிலும் ஒரு கோடி மகளிர் பயன்பெறும் வகையில் தொடங்கப்படும் இத்திட்டத்தை அனைத்து மக்களிடமும் முழுமையாகக் கொண்டு சேர்க்க வேண்டியது மிக அவசியம்.

இத்திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பின்வரும் செயல்பாடுகளை மேற்கொள்ள அனைத்து ஒன்றிய – நகர – பகுதி – பேரூர் – கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகளுக்கும் மாவட்டச் செயலாளர்கள் அறிவுறுத்த வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்ளப்பபடுகிறார்கள்.

1000 ரூபாய் திட்டத்தை முன்னிறுத்தி வீடுகளில் ‘கலைஞர் உரிமைத் தொகைக்கு நன்றி’ ‘உரிமைத் தொகை 1000’ போன்ற வாசகங்களை எழுதி கோலமிடவேண்டும். அனைத்து நிர்வாகிகள் வீடுகளிலும் கோலமிடப்படுவதை மாவட்டச் செயலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

சுவரொட்டிகள்: மக்கள் கூடும் இடங்களில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் சுவரொட்டி ஒட்டி, விளம்பரம் படுத்த வேண்டும்.

பேருந்துநிலையங்கள், அங்காடிகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இனிப்பு வழங்கி கொண்டாடிட வேண்டும். இனிப்பு வழங்கும் போது சிறு துண்டறிக்கையை சேர்த்து வழங்கிட வேண்டும்.

கழகத்தின் சுவர் விளம்பரங்களில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து, புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், கலைஞர் உரிமைத் தொகை ஆகிய திட்டங்களை முன்னிலைப்படுத்தும் வகையில் சுவர் விளம்பரங்களை எழுத வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் அனைத்து நிர்வாகிகளையும் வலியுறுத்த வேண்டும்.

உள்ளூரில் ஆட்டோ ஏற்பாடு செய்து குறைந்தபட்சம் 2 நாட்களுக்கு அனைத்துப் பகுதிகளிலும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து, புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், கலைஞர் உரிமைத் தொகை உள்ளிட்ட அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கி கழக அரசின் சாதனைகளை பிரச்சாரம் செய்திட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!