Skip to content
Home » ”மாமன்னன்”படத்தை பாராட்டிய டைரக்டர் பா.ரஞ்சித்-க்கு உதயநிதி நன்றி….

”மாமன்னன்”படத்தை பாராட்டிய டைரக்டர் பா.ரஞ்சித்-க்கு உதயநிதி நன்றி….

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் 29 ஆம் தேதி வெளியானது ‘மாமன்னன்’ படம். உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியாகியுள்ள இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்துக்கு பா.ரஞ்சித் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது. உண்மையாகவே தனித்தொகுதி எம்.எல்.ஏக்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்?

சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன?அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று மாமன்னன். உண்மையாகவே பெரும் பாராட்டுக்குரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம். பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற மாரி செல்வராஜ், வடிவேலு மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்” என பாராட்டியதோடு பல கேள்விகளையும் முன்வைத்தார்.

இந்தநிலையில் உதயநிதி பா.ரஞ்சித்-க்கு பதில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்…. 

`மாமன்னன்’ திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சகோதரர் பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றி. சாதிய அடக்குமுறைகளும் – ஏற்றத்தாழ்வும் கழகம் மட்டுமல்ல, எந்த கட்சிக்குள் இருந்தாலும் அது அறவே ஒழிக்கப்பட வேண்டும்.

அனைவருக்குமான சுயமரியாதையை உறுதி செய்ய, தொடர் பரப்புரை செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது கழகம்.

ஆட்சி பொறுப்பேற்கும் போதெல்லாம் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் `சமூகநீதி’யை அரியணை ஏற்றி, அரசியல் தளத்தில் தொடர்ந்து போராடி வருகிறது கழக அரசு. அண்ணா-கலைஞர் வழியில் எங்கள் கழகத் தலைவர் அவர்களும் இப்பணியைத் தொடர்கிறார்.

`பராசக்தி’யில் தொடங்கி `மாமன்னன்’ வரை கலைவடிவங்களிலும் `சமூகநீதி’யைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருகிறோம்.

ஆயிரமாயிரம் ஆண்டு கால சனாதனத்திற்கு எதிராக, சமத்துவம் காண போராடும் நூறாண்டுகால போராட்டம் இது. இன்னும் முழுமை பெறாத போராட்டமும்கூட.

ஒரே திரைப்படத்தின் மூலம் சமூகத்தில் தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திவிட முடியாது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். பெரியார்-அம்பேத்கர்
வழியில் மக்களுடன் தொடர்ந்து உரையாடி இம்மாற்றத்தை நிகழ்த்த முடியும். அதைநோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம். இப்பயணத்தில் கழகம் மீதும் என் மீதும் இப்போது நம்பிக்கை கொண்டிருக்கும் சகோதரர் இரஞ்சித் அவர்களுக்கு நன்றி என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!