Skip to content
Home » மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் போதை ஆசாமி ரகளை…. நோயாளிகள் அச்சம்..

மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் போதை ஆசாமி ரகளை…. நோயாளிகள் அச்சம்..

  • by Senthil

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனைக்கு மன்னார்குடியை ஒட்டி உள்ள சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமன்றி முத்துப்பேட்டை, கோட்டூர், நீடாமங்கலம் முதலான பகுதிகளில் இருந்தும் தினசரி நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு மன்னார்குடி விழல்காரதெரு பகுதியைச் சேர்ந்த வடிவேலு, மது போதையில் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பகுதிக்கு சென்று அங்கு இருந்த மேஜை, நாற்காலிகளை உடைத்து பெரும் ரகளையில் ஈடுபட்டார். அப்போது மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த பெண் மருத்துவர் மற்றும் செவிலியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் வெளியே ஓடிவிட்டனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், ‘மன்னார்குடி அரசு மருத்துவமனையில் போதை ஆசாமி ஒருவரின் அட்டகாசத்தால் மருத்துவப் பணியாளர்களும், பொதுமக்களும் பாதிப்புக்கு ஆளானதாக வரும் செய்தி கவலை அளிக்கின்றது. போதைபொருள் புழக்கம் குறித்த எனது தொடர் எச்சரிக்கைகளுக்கு செவிமடுக்காமல் இந்த திமுக அரசு செயலற்று இருந்ததன் விளைவே, தற்போது தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டால் அதிகரிக்கும் குற்றச் செயல்களும் பொதுமக்களுக்கான இடையூறுகளும்.

கடந்த சில நாட்களாக போதைப்பொருட்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்த செய்திகள் பெருமளவு அதிகரித்துள்ள நிலையில், இனியாவது இதுபோன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் போதைப்பொருள் புழக்கத்தை தடுத்து, சட்டம் ஒழுங்கை சீர்படுத்துமாறு விடியா அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!