Skip to content
Home » மயிலாடுதுறை-சேலம் இடையே நேரடி ரயில் சேவை வரும் 28ம் தேதி முதல் துவக்கம்..

மயிலாடுதுறை-சேலம் இடையே நேரடி ரயில் சேவை வரும் 28ம் தேதி முதல் துவக்கம்..

  • by Senthil

தஞ்சை மாவட்டத்தில் இருந்து நாமக்கல் வழியாக சேலத்திற்கு நேரடி ரயில் சேவை ஏற்படுத்தி தரவேண்டும் என்பது பயணிகள், வர்த்தகர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைத்து தரப்பினரும் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை – திருச்சி, திருச்சி- கரூர், கரூர்-சேலம் ஆகிய 3 ரயில்களின் இணைந்த சேவைக்கான கருத்துரு ஒன்றை தென்னக ரயில்வே கடந்த பிப்ரவரி மாதத்தில் ரயில்வே வாரியத்திற்கு அனுப்பியது. அதற்கு ரயில்வே வாரியம் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.

தற்போது இந்த இணைக்கப்பட்ட ரயிலுக்கான கால அட்டவணை இறுதி செய்யப்பட்டு வரும் 28ம் தேதி (திங்கட்கிழமை) முதல் மயிலாடுதுறை- சேலம் இடையே நேரடி ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. ரயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து அதற்கான கருத்துருவை ரயில்வே வாரிய ஒப்புதலுக்கு பரிந்துரை செய்த திருச்சி, சேலம் கோட்டம் மற்றும் தென்னக ரயில்வே அதிகாரிகளுக்கும், ஒப்புதல் வழங்கிய ரயில்வே வாரிய அதிகாரிகளுக்கும், கோரிக்கை நிறைவேற உதவிய அரசியல் கட்சியினருக்கும், வர்த்தக சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளுக்கும் தஞ்சை மாவட்ட ரயில் பயணிகள் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டுள்ளனர்.

மேலும் இந்த புதிய ரயில் சேவை தொடக்க நாளான 28ம் தேதி கும்பகோணத்தில் வழக்கம் போல் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது என்றும் சங்க செயலாளர் கிரி தெரிவித்தார்.

மயிலாடுதுறை-சேலம் புதிய விரைவு ரயில் மதியம் 1.45 மணிக்கு சேலம் சென்றடைகிறது. அங்கிருந்து பெங்களூரு செல்ல விரும்புவோர் மதியம் 2.40 மணிக்கு புறப்படும் காரைக்கால்-பெங்களூரு ரயிலை (வ.எண் 16530) பயன்படுத்திக்கொள்ளலாம். மதியம் 3.35 மணிக்கு புறப்படும் சேலம்- பெங்களூரு இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில்(வ. டி எண் 12678) பயணம் செய்யலாம் என பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

தினமும் காலை 6.20 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்படும் இந்த ரயில் கும்பகோணம், தஞ்சை, திருச்சி வழியாக சேலத்தை மதியம் 1.45 மணிக்கு சென்றடைகிறது. சேலத்தில் மதியம் 2.05 மணிக்கு புறப்படும் இந்த ரெlயில் மீண்டும் மயிலாடுதுறையை இரவு 9.40 மணிக்கு வந்தடைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!