Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மெல்லச் சாகும் தென்பெண்ணை ஆறு… காப்பாற்ற நடவடிக்கை தேவை!

மெல்லச் சாகும் தென்பெண்ணை ஆற்றை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

தென்பெண்ணை ஆற்றை காப்பாற்ற வேண்டும் என்றால், கர்நாடகத்தில் இருந்து கழிவுகள் கலக்கப்படுவதை தடுப்பது தான் ஒரே வழியாகும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கர்நாடகத்தில் தென்பெண்ணை ஆற்றில் கலக்கவிடப்படும் கழிவுகளால், ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீரில் ஆக்சிஜன் வாயுவின் அளவு இயல்பான அளவை விட 90 மடங்கு குறைவாக இருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. தென்பெண்ணை ஆற்றை பாதுகாக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் பலமுறை ஆணையிட்டும் கூட, அதன் மீது கர்நாடக அரசும், தமிழக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில், ஆற்று நீரில் இயல்பாக லிட்டருக்கு 7 மில்லி கிராம் முதல் 9 கிராம் வரை ஆக்சிஜன் கலந்திருக்க வேண்டும் என்றும், ஆனால், தென்பெண்ணை ஆற்று நீரில் 0.1 மில்லிகிராம் அளவுக்கு மட்டுமே ஆக்சிஜன் கலந்திருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. இது இயல்பான அளவை விட 90 மடங்கு குறைவாகும். அதேபோல், பாஸ்பரஸ், நைட்ரேட்ஸ் போன்ற நச்சு திடப்பொருள்களின் அளவும் இரு மடங்கிற்கும் கூடுதலாக கலந்திருக்கிறது.

இயல்பாக ஆற்று நீரில் ஆக்சிஜன் அளவு லிட்டருக்கு 4 மில்லி கிராம் அளவுக்கு குறைந்ததால், அதில் மீன்கள் உள்ளிட்ட எந்த நீர்வாழ் உயிரினங்களும் வாழ முடியாது. ஆனால், இப்போது 0.1 மில்லிகிராம் என்ற அளவுக்கு ஆக்சிஜன் அளவு குறைந்து விட்டது. தென்பெண்ணை ஆற்றில் அடிக்கடி மீன்கள் செத்து மிதந்ததற்கு இது தான் காரணம் ஆகும். தென்பெண்ணை ஆறு கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருப்பதையே இது காட்டுகிறது. ஆனால், இது குறித்த எந்த கவலையும் கர்நாடக, தமிழக அரசுகளுக்கு இல்லாதது கவலையளிக்கிறது.

கர்நாடகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுகள் தினமும் 132.9 கோடி அளவுக்கு தென்பெண்ணை ஆற்றில் கலக்கவிடப்படுவது தான் இந்த அவல நிலைக்கு காரணம் ஆகும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ஆம் நாள் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தின் ஒரு கட்டமாக கெலவரப்பள்ளி அணையை ஆய்வு செய்தேன். அப்போது அந்த அணையில் உள்ள நீரில் கலந்துள்ள ஆக்சிஜனின் அளவு லிட்டருக்கு 1.3 மில்லி கிராம் என்ற அளவில் இருந்தது. அடுத்த ஓராண்டுக்குள் கெலவரப்பள்ளி அணையில் உள்ள நீரில் ஆக்சிஜன் அளவு 13 மடங்கு குறைந்திருப்பதில் இருந்தே தென்பெண்ணை ஆறு எந்த அளவுக்கு சீரழிக்கப்பட்டு வருகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இது தொடர்பான வழக்கில் 2022 ஜூலை மாதம் 13ஆம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கிய தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம், தென்பெண்ணை ஆற்றில் கழிவுகள் கலப்பதை முற்றிலுமாகத் தடுக்க கர்நாடக மாசுக்கட்டுப்பாடு வாரியமும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையிட்டது. ஆனால், அதன்பின் 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கர்நாடகத்தில் தென்பெண்ணை ஆறு பாயும் பெங்களூர் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் 29 சுத்திகரிப்பு நிலையங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. அவற்றின் மூலம் 80 கோடி லிட்டர் கழிவு நீரை மட்டுமே சுத்திகரிக்க முடியும். தென்பெண்ணை ஆற்றில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க பெங்களூரில் 10 புதிய சுத்திகரிப்பு நிலையங்களும், பிற பகுதிகளில் 12 புதிய சுத்திகரிப்பு நிலையங்களும் அமைக்கப்பட வேண்டும். இவற்றை அமைக்க சுமார் ரூ.5000 கோடி நிதி தேவை. நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதை கர்நாடக அரசு தாமதப்படுத்தி வருகிறது. மேகதாது அணை கட்டுவதற்காக ரூ.9000 கோடி செலவழிக்கத் தயாராக இருக்கும் கர்நாடக அரசு, தென்பெண்ணை ஆற்றில் கழிவுகள் கலப்பதை ரூ.5000 கோடி செலவு செய்யத் தயாராக இல்லை. இதற்குக் காரணம் இதனால் கர்நாடகத்திற்கு பாதிப்பு இல்லை என்பது தான்.

கெலவரப்பள்ளி அணையிலிருந்து தான் ஓசூர் நகரின் குடிநீர் தேவைக்காக தினமும் 3 கோடி லிட்டரும், ஓசூர் சிப்காட் தொழிற்பேட்டையின் தேவைக்காக 1.5 கோடி லிட்டரும் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இந்த தண்ணீர் சுத்திகரித்து தான் வழங்கபடுகிறது என்றாலும் அணைக்கு வரும் தண்ணீரில் நச்சுகள் கலந்திருப்பதால் தூய்மையான குடிநீரை மக்களுக்கு தர முடியவில்லை. கெலவரப்பள்ளி அணையை பாசன ஆதாரமாகக் கொண்டிருக்கும் 8000 ஏக்கர் விளைநிலங்களும் அசுத்தமான நீரால் பாதிக்கப்பட்டு வருகின்றன.

கர்நாடகத்தின் நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு ஓசூர் கெலவரப்பள்ளி அணை வழியாக தமிழகத்திற்குள் நுழைந்து கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் வழியாக கடலூர் மாவட்டம் வரை பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது. இதனால் 25 ஆயிரத்திற்கும் கூடுதலான ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. சுமார் 50 லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் தென்பெண்ணை ஆறு திகழ்கிறது. தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகம் திறந்து விடும் கழிவுகளால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படுவதை தமிழக அரசு இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

தென்பெண்ணை ஆற்றை காப்பாற்ற வேண்டும் என்றால், கர்நாடகத்தில் இருந்து கழிவுகள் கலக்கப்படுவதை தடுப்பது தான் ஒரே வழியாகும். இது தொடர்பான தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆணைகளை கர்நாடக அரசு செயல்படுத்தாத நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டி, கர்நாடக அரசிடம் இழப்பீடு கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர வேண்டும். கர்நாடக அரசுக்கு தொடர் நெருக்கடி கொடுத்து தொழிற்சாலைகளின் கழிவு நீர் தென்பெண்ணை ஆற்றில் கலக்கவிடப்படுவதை தடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!