Skip to content
Home » மெட்ரோ ரயில் திட்டம்….. திருச்சி உயர்மட்ட பாலம் தற்காலிக நிறுத்தம்…. அமைச்சர் நேரு

மெட்ரோ ரயில் திட்டம்….. திருச்சி உயர்மட்ட பாலம் தற்காலிக நிறுத்தம்…. அமைச்சர் நேரு

திருச்சி அரசு மருத்துவமனையில்
ருபாய் 2 கோடி மதிப்பீட்டிலான
இயந்திரங்களை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில்
புதிய  மருத்துவ கருவிகளை  துவக்கி வைக்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு  இதில் கலந்து கொண்டு ரூ.29லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மின் தூக்கி (LIFT),ரூ. 47 லட்சத்தில்  அமைக்கப்பட்டுள்ள
திரவ பிராணவாயு கொள்கலன் (LIQUID OXYGEN TANK) மற்றும் ரூ. 1.23 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி நோய் எதிர்ப்பு குருதி பகுப்பாய்வு (BLOOD GROUP AND ANTIBODIES ANALYSER) இயந்திரங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி   வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட  கலெக்டர் பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர்  டாக்டர்  த.நேரு, கண்காணிப்பாளர் மருத்துவர் அருண்,
உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் கே. என். நேரு நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழ் நாட்டில் வார்டுகள் மறுவரையறை , மாநகராட்சி விரிவாக்கம் ஆகியவற்றை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட உள்ளது.

சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த பின்பு அந்த குழு அமைக்கப்படும். ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சருடன் ஆலோசித்து, அந்த குழு அமைக்கப்பட்டு வார்டுகள் மறுவரையறை செய்யப்படும்.

மெட்ரோ ரயில் திட்ட ஆய்வு பணிக்காக, திருச்சியில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் ஆய்வு பணிகள் முடிந்த பின்பு உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும்.

சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வரவேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் ஆசையாக இருக்கிறது – ஆனால் அது ஒரு போதும் நிறைவேறாது. சிறப்பான ஆட்சியை முதல்வர் வழங்கி வருகிறார். எனவே, சட்டமன்ற தேர்தல் எந்த தேதியில் வர வேண்டுமோ அந்த தேதியில் தான் நடக்கும். நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்தில் தேர்தல் வருமா என்கிற கேள்விக்கே இடமில்லை.

தி.மு.க வில் 2 கோடி பேரை உறுப்பினர்களாக்க வேண்டும் என செயல்பட்டு வருகிறோம். அது சாத்தியம் தான்.

திருச்சியில் புதிய காவிரிப் பாலம் அமைப்பதற்கு, மத்திய அரசு அலுவலகம் ஒன்றை அகற்ற வேண்டி உள்ளது. அவர்களுடன் பேசி அது அகற்றப்பட்டு பின்பு புதிய காவேரி பாலப் பணிகள் தொடங்கும்.

திமுக ஆட்சியில் திருச்சி புறக்கணிக்கப்படவில்லை. மற்ற மாவட்டங்கள் பொறாமைப்படும் அளவிற்கு திருச்சிக்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் கொடுத்திருக்கிறார். 20 மாத தி.மு.க ஆட்சியில் ரூ.3000 கோடி அளவிற்கு திட்டங்கள் திருச்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகள் ஆட்சி செய்த அ.தி.மு.க திருச்சிக்கு எதுவும் செய்யவில்லை ஆனால் பல கோடி மதிப்பிலான திட்டங்களை தி.மு.க அரசு செய்து வரும் நிலையில் ஊடகங்கள் தான் திருச்சி புறக்கணிக்கப்படுவதாக கூறுகிறது. திருச்சி ஒருபோதும் புறக்கணிக்கப்படாது
திருச்சியை முதல்வர் நேசிப்பவராக இருக்கிறார். மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு திருச்சிக்கு நிதியை முதல்வர் வழங்குகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!