Skip to content
Home » தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…. மிலாடி நபி வாழ்த்து

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…. மிலாடி நபி வாழ்த்து

மிலாடி நபி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழக  முதல்வர்  மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள  மிலாடி நபி வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:- மகிழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு அண்ணல் நபிகள் நாயகம் பிறந்தநாளை எழுச்சியோடு கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு “மிலாடி நபி” நன்னாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். “நம்பிக்கைக்குரியவர்”. “அடைக்கலம் அளிப்பவர்”. “வாய்மையாளர்” எனப் பொருள்படும். அல் அமீன்” எனும் சிறப்புப் பெயர்கொண்டு அவர்மீது அன்பு கொண்ட பொதுமக்களால் அழைக்கப்பட்ட நபிகள் பெருமானார். ஏழைகளின் மீது இரக்கம் காட்டுபவராகவும் ஆதரவற்றோரை அரவணைத்து ஆதரவுக் கரம் நீட்டுபவராகவும் கருணையின் அடையாளமாக விளங்கினார்.

அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்தநாளாகிய “மிலாடி நபி” நன்னாளை இஸ்லாமிய மக்கள் மகிழ்ந்து கொண்டாட வேண்டும் என்பதற்காக முதன்முதலாக, தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் முதன்முதலாக ஆட்சிப் பொறுப்பேற்ற 1969-ஆம் ஆண்டிலேயே அரசு விடுமுறை நாளாக அறிவித்துச் செயல்படுத்தினார். ஆனால். அந்த மிலாடி நபி நாள் விடுமுறையை 2001-ல் . அ.தி.மு.க. அரசு ரத்து செய்தது. திராவிட முன்னேற்றக் கழக அரசு மீண்டும் 2006-இல் அமைந்தவுடன், மீலாதுன் நபித் திருநாளுக்கு “அரசு விடுமுறை” வழங்கியது. என்றைக்கும் சிறுபான்மையின மக்களின் உற்ற தோழனாக உரிமைப் பாதுகாவலனாக விளங்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசுதான். அரசு வேலைவாய்ப்புகளிலும் கல்வி நிறுவனங்களிலும் இஸ்லாமியர்க்கு மூன்றரை விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியது உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை நல்கி தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமிய சமுதாய மக்களின் நலன் காத்து நிற்கிறது.

மேலும், உருது பேசும் முஸ்லீம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது சிறுபான்மையினர் நல ஆணையத்தை தொடங்கியது. வக்பு வாரிய சொத்துக்களைப் பராமரிக்க முதன்முதலாக மானியம் வழங்கியது தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் தொடங்கியது உருது அகாடமியைத் தொடங்கியது கண்ணியத்துகுரிய காயிதே மில்லத் அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கி, இடம் ஒதுக்கியது காயிதே மில்லத் மகளிர் கல்லூரியை உருவாக்கியது காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரிக்கு இடம் கொடுத்தது எனத் திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களும் இஸ்லாமிய சமுதாயத்துக்காகச் செய்த திட்டங்களையும் சாதனைகளையும் பட்டியலிட்டுக் கொண்டே இருக்கலாம்.

இந்த ஆழங்காற்பட்ட பேரன்பின் தொடர்ச்சியாகத்தான் நமது திராவிட மாடல் அரசிலும், சிறுபான்மையினர் விடுதியில் பண்டிகைகளுக்குச் சிறப்பு உணவு உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கான உதவித்தொகை அதிகரிப்பு, சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் கட்டப்பட நிதி ஒதுக்கீடு தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கான நிர்வாக மானியம் அதிகரிப்பு, பள்ளி வாசல்கள், தர்க்காக்கள், வக்பு நிறுவனங்கள் பழுது பார்ப்பதற்காக ஆண்டு தோறும் வழங்கப்படும் மானியம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அண்ணல் நபிகளாரின் நற்போதனைகளிலிருந்து வழுவாமல் வாழ்ந்துவரும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த மிலாடி நபி நன்னாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்து மகிழ்கின்றேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!