Skip to content
Home » அதிமுக-பாஜ மாதிரி இருக்காதீங்க.. புது ஜோடிகளுக்கு அமைச்சர் உதயநிதி அட்வைஸ்….

அதிமுக-பாஜ மாதிரி இருக்காதீங்க.. புது ஜோடிகளுக்கு அமைச்சர் உதயநிதி அட்வைஸ்….

திமுக தலைவரும், தமிழக முதல்வருமாக மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் 81 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு கோவை பிருந்தாவன் மகாலில் இன்று  நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 81 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து பேசியதாவது… திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளவர்களுக்கு முதல்வர் சார்பிலும், திமுக சார்பிலும் வாழ்த்துகள். தாலியை மணமகளுக்கு கட்டியதால், யாரும், யாருக்கும் அடிமை கிடையாது. இங்கு நடந்திருப்பது சுயமரியாதை திருமணம். ஒரு காலத்தில் சுயமரியாதை திருமணத்தை ஏற்க மறுத்தனர். சுயமரியாதை திருமணத்தை அங்கீகரிக்க தந்தை பெரியார் போராடினார். அதற்கு சட்ட வடிவம் கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா. முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி எங்கு சென்றாலும் சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைத்தார். தற்போதைய முதல்வரும் சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைக்கிறார். திருமணமாகி உள்ள நீங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அடிமையாக இருக்கக்கூடாது. உங்கள் உரிமையை நீங்கள் ஒருவருக்குஒருவர் கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். அதிமுகவும் – பாஜகவும் போல் இருந்து விட வேண்டாம்.

உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு சுத்தமான தமிழ் பெயர் வையுங்கள். அதுவே உங்களிடம் நான் வைக்கும் ஒரே கோரிக்கை. கொஞ்சம் கொஞ்சமாக இந்தியை திணிக்கின்றனர். நம் தமிழ்மொழியை நாம் காப்பாற்ற வேண்டும் என்றால் தமிழில் பெயர் வையுங்கள். அதேபோல், வீட்டில் அரசியல் பேசுங்கள். தமிழகத்தில் என்ன நடக்கிறது, நாட்டில் என்ன நடக்கிறது, திராவிட மாடல் ஆட்சியில் கடந்த 20 மாதங்களில் என்னென்ன திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன, அதை எவ்வாறு மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளோம், நாட்டுக்கு நல்லது செய்பவர்கள் யார் என பேசுங்கள்.

அதிமுக ரூ.5 லட்சம் கோடி கடனுடன் ஆட்சியை விட்டுச் சென்றது. மேலும், கொரோனா  பரவலும் இருந்தது. தொற்றால் பாதிக்கப்பட்ட கோவையில் முதல்வர் நேரடி ஆய்வு நடத்தியுள்ளார். தேர்தல் வந்தால் அதிமுகவினரும், பாஜகவினரும் வெளியே வந்து மக்களை சந்திப்பார்கள். பின்னர் வீட்டுக்குச் சென்று விடுவர். பிரச்சினை வரும்போது கட்சி எனக்கு சொந்தம், கொடி எனக்கு சொந்தம் என வெளியே வருவர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது வெளியே வந்தனர். அப்போது வெளியே வந்த அவர்கள், மிகப்பெரிய தோல்வியை பார்த்தவுடன் மீண்டும் வீட்டுக்குச் சென்று விட்டனர். அடுத்த 8 மாதத்துக்கு வர மாட்டார்கள். அடுத்து மக்களவைத் தேர்தல் வரும் போது மட்டும் தான் வெளியே வருவார்கள்.

ஆனால், தேர்தல் இருக்கிறதோ, இல்லையோ எப்போதும் மக்களிடம் இருந்து மக்கள் பணியாற்றக்கூடியது தான் திமுக. எனவே, இந்த அரசுக்கு நீங்கள் எல்லாம் துணை நிற்க வேண்டும். கருணாநிதியும், தமிழும் போல, திமுக தலைவரும் உழைப்பும் போல வாழ மணமக்களுக்கு வாழ்த்துகள்” என குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!