உத்தரபிரதேசத்தில் பாத்திர வியாபாரி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் அலட்சியமாக செயல்பட்ட 3 போலீசாரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத் சகானி. பாத்திரக் கடை நடத்தி வந்த இவர், கடந்த புதன்கிழமை இரவு வியாபாரம் முடிந்து தனது கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக சமூக வலைதளத்தில் பதிவிட்டதாகக் கூறி, ஒரு கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த வினோத் சகானியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோண்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக லக்னோவில் உள்ள கே.ஜி.எம்.யு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, கொலையாளிகள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாஜக கூட்டணிக் கட்சியான நிஷாத் கட்சியின் தலைவரும், மாநில அமைச்சருமான சஞ்சய் நிஷாத் லக்னோ மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடம் முன்பு அமர்ந்து சொந்த அரசுக்கு எதிராகவே தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் கோண்டா பகுதிக்கு நேரில் சென்ற அமைச்சர், மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை நேரில் நிறுத்தி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
