Skip to content
Home » சிலரிடம் பெரியார் வழியில் தான் பேச வேண்டி இருக்கிறது……மத்திய அமைச்சர் நிர்மலாவுக்கு…. உதயநிதி பதில்

சிலரிடம் பெரியார் வழியில் தான் பேச வேண்டி இருக்கிறது……மத்திய அமைச்சர் நிர்மலாவுக்கு…. உதயநிதி பதில்

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்  நேற்று டில்லியில் பேட்டி அளித்தபோது, அவங்க அப்பன் வீட்டு சொத்தையா கேட்குறோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பற்றிய கேள்விக்கு, அவங்க பாஷை எப்போதும் அப்படிதான். இப்படியெல்லாம் பேசுறவங்க அவங்க அப்பன் வீட்டு சொத்தை வைத்தா இன்னிக்கு பதவி அனுபவிக்கிறாரா?-ன்னு சொல்ல முடியுமா? கேட்க முடியுமா? என்றார்.நிர்மலா சீதாராமனின் இந்த  பேட்டிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  சுடச்சுட பதிலடி அளித்துள்ளார்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார்- பேரறிஞர் அண்ணா- முத்தமிழறிஞர் கலைஞர்- கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள். சிலரிடம் அண்ணாவைப் போல- சிலரிடம் கலைஞரைப் போல– சிலரிடம் கழகத்தலைவரைப் போல பேசுகிறோம்.

எனினும், குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது. வெள்ள பாதிப்புக்காக கழக அரசு நிவாரண நிதி கேட்டால், “நாங்கள் என்ன ஏ.டி.எம்-ஆ” என ஒன்றிய அமைச்சர் ஒருவர் கூறியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ‘அவர் அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம்” என்று கூறினேன்.

என் பேச்சில் மரியாதை சற்று குறைவாக இருந்ததாக அப்போது சிலர் வருத்தப்பட்டார்கள். அடுத்த நாளே, மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களுடைய அப்பா வீட்டு பணத்தை கேட்கவில்லை என்று அவர்கள் கோரியபடியே மிகுந்த ‘மரியாதையுடன்’ கேட்டுக்கொண்டேன். ஆனாலும், அமைச்சர். நிர்மலா சீதாராமன் அவர்கள் ‘பாஷை’ குறித்து இன்று பாடமெடுத்துள்ளார்கள். மீண்டும் சொல்கிறேன் மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் .நிர்மலா சீதாரமன் அவர்களின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை நாம் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து தமிழ்நாடு அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியைத்தான் கேட்கிறோம்.

வழக்கமாக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் மாநில பேரிடர் நிவாரண நிதியை தந்து விட்டு, ஏதோ ஒன்றிய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தந்தது போல அடித்துப் பேச வேண்டாம். நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ‘மரியாதை’ தருவதற்கு தயாராகவே இருக்கிறோம் – தமிழ்நாட்டு மக்கள் மீது கொஞ்சமாவது ‘அக்கறை’ வைத்து நிதியைத் தாருங்கள் மரியாதைக்குரிய மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களே! இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!