கத்தி முனையில் சுமைதூக்கும் தொழிலாளியிடம் பணம் பறிப்பு– 2 பேர் கைது
திருச்சி முசிறி பாலசிரமணி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவர் லோடுமேனாக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி சக்திவேல் மற்றும் அவரது நண்பர் நடேசன் இருவரும் அரிசி மூட்டையை ஏற்றுவதற்காக சரக்கு வேனில் அரியமங்கலம் நோக்கி சென்றுள்ளனர். அப்போது காந்திஜி நகர் ஹரிணி தெரு அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அப்போது நடராஜன் ஒலி எழுப்பியும் அவர்கள் நகராமல் அங்கேயே நின்று கொண்டிருந்தனர். இதுகுறித்து சக்திவேல் கேட்டபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்கள் 2 பேரும், சக்திவேலை தகாத வார்த்தைகள் திட்டி, கத்தியைக் காட்டி மிரட்டி அவரது சட்டைப் பையில் இருந்த 1500 ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்து அவர் அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அரியமங்கலம் காமராஜர் நகரை சேர்ந்த அருண்குமார் (வயது 34) ரவுடி, ஹரிக்குமார் வயது (30 )ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
திருச்சி மேல் கல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் கணேசன் வயது 28. இவர் கடந்த 30 ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தை மன்னார்புரம் பகுதியில் உள்ள தனியார் காம்ப்ளக்ஸ் அருகே நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து அவர் கே.கே. நகர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லுக்குழி பகுதியை சேர்ந்த கோகுல்( 23) , முடுக்குப்பட்டி பகுதியை சேர்ந்த நாகராஜ் (24 )ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
