Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டூவீலர் மீது அரசு பஸ் மோதி-தாய்-மகள் பலி… கணவன் காயம்

டூவீலர் மீது அரசு பஸ் மோதி-தாய்-மகள் பலி... கணவன் காயம்

கோவில்பட்டியில் பைக் மீது அரசு பேருந்து மோதியதில் கணவர் கண்முன் மனைவி, மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (42). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வளர்மதி (36). இவர் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்களது மகள் அஸ்விகா (9), பாரதி நகரில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார்.

தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ள ரமேஷ் நேற்று மாலை தனது மனைவி, மகளை வீட்டுக்கு அழைத்து வர பள்ளிக்கு பைக்கில் சென்றார். முதலில் மகள் அஸ்விகாவை அழைத்துக்கொண்டு வந்தார். பின்னர் மனைவி வளர்மதியையும் பைக்கில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார்.

பசுவந்தனை சாலையில் சென்றபோது, பின்னால் வந்த அரசு நகர பேருந்து எதிர்பாராதவிதமாக டூவீலர் மீது மோதியது. இதில், வளர்மதி, அஸ்விகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ரமேஷ் காயமடைந்தார்.

தகவலறிந்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காயமடைந்த ரமேஷை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல், தாய், மகள் சடலங்களை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பேருந்து ஓட்டுநர் கடலையூர் அருகேயுள்ள பீக்கிலிபட்டியைச் சேர்ந்த சண்முகையா மகன் செல்வம்(29) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் கண் முன் மனைவி, மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பசுவந்தனை சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்த சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. மேலும், கடைகளுக்கு வருபவர்கள் தங்களது பைக்குகளையும் சாலையோரம் நிறுத்திச் செல்கின்றனர்.

இதனால் பசுவந்தனை சாலையில் விபத்துகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் நெடுஞ்சாலைத்துறையும், நகராட்சி நிர்வாகமும் கண் துடைப்புக்காக சில இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு சென்று விடுகின்றனர்.

ஆனால், விபத்துகள் மட்டும் தொடர்கதையாகி வருகிறது. பசுவந்தனை சாலையில் ஏராளமான பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் தினமும் காலை, மாலையில் பசுவந்தனை சாலை வழியாகத்தான் வந்து செல்கின்றனர்.

எனவே, மாணவர்களின் நலன் கருதி பசுவந்தனை சாலை மட்டுமல்லாது, பிரதான சாலை, புதுரோடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையும், நகராட்சி நிர்வாகமும் முன் வரவேண்டுமென பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!