Skip to content
Home » இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்…நடிகரானார்….

இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்…நடிகரானார்….

  • by Senthil

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்  73 வயதான முத்தரசன் ஒரு திரைப்படத்தில் விவசாயி கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சிறு வயது முதலே மிக தீவிரமாக ஈடுபட்டு வருபவர் முத்தரசன்.  அவரது உழைப்பின் பயனாக அவர் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக  உள்ளார்.  டெல்டா மாவட்டமான  திருவாரூர் மாவட்டம்  திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அலிவலம்  என்ற கிராமத்தில் ஒரு விவசாயி குடும்பத்தில் பிறந்தவர் முத்தரசன்.   மிக எளிமையானவராக அறியப்படும் முத்தரசன் பழகுவதற்கு இனிமையானவர்,  வெகு இயல்பாக மக்களிடம் கலந்து பழகக் கூடியவர்.

அப்படிப்பட்டவர் திரைப்படம் ஒன்றில்  நடித்து வரும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விவசாயத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் அரிசி என்ற திரைப்படத்தை விஜயகுமார் என்பவர் எழுதி இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 35 நாட்களாக நடந்து வருகிறது.

உடல்நலக் குறைபாடு காரணமாக  திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அண்மையில் வீடு திரும்பியுள்ள முத்தரசன் தற்போது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விவசாயியாக நடிக்கும் அவர் பங்கேற்கும் காட்சிகள் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் ரஷ்யா மாயன், சிசர் மனோகர் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.  இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். விவசாயி கதா பாத்திரத்தில் முத்தரசன் தோற்றம் வெளியாகி பலரிடமும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

 முத்தரசன் நடிக்க வந்தது குறித்து படத்தை இயக்கும் எஸ்.ஏ.விஜய்குமார் கூறும்போது, “முத்தரசனிடம் இதில் நடிக்கக் கேட்டபோது முதலில் அவர் மறுத்துவிட்டார். தனக்கு அரசியல் பணிகள் அதிகம் இருக்கின்றன என்று கூறிவிட்டார். இருந்தாலும் இந்தக் கதையில் நடித்து இதன் கருத்தை நீங்கள் சொன்னால்தான் சரியாக இருக்கும் என்று சொன்னோம். பிறகு கதையைக் கேட்டார். விவசாயப் பின்னணி கதை. முதலில் தயக்கத்துடன் படப்பிடிப்புக்கு வந்தார். பிறகு சகஜமாகிவிட்டார். மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். அரிசி என்பது வெறும் உணவு தானியம் மட்டும் அல்ல. மனித வாழ்வின் உயிர் நாடி என்பதை இந்தத் தலைமுறைக்கு எடுத்துச் சொல்வதுதான் கதை. விவசாயியாக நடித்திருக்கும் இரா. முத்தரசன் பேசும் வசனங்கள் அர்த்தம் நிறைந்ததாக இருக்கும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!