கரூர் அருகே பவித்திரம் பகுதியில் கோவை தேசிய நெடுஞ்சாலையில் மூன்று லாரிகள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட கோர விபத்தில், லாரி ஓட்டுநர் ஒருவர் பலத்த காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இருவர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் அடுத்த பவித்திரம் அருகே ஈஷா நர்சரி கார்டன் பகுதியில் உள்ள பிரிவு சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது அப்போது ஜல்லி ஏற்றிச் சென்ற லாரியும், எதிரே வந்த டேங்கர் லாரி உள்ளிட்ட மூன்று லாரிகளும் எதிர்பாராதவிதமாக ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்டது இந்த ஜல்லி ஏற்றிச் சென்ற லாரியின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.
லாரியை ஓட்டி வந்த பஞ்சப்பட்டி பகுதியைச் சேர்ந்த 55 வயதான சக்திவேல், இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தார். அவரை மீட்ட அப்பகுதியினர் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், மற்ற இரண்டு லாரிகளின் ஓட்டுநர்களும் லேசான காயமடைந்தனர். அவர்களும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று லாரிகள் அடுத்தடுத்து மோதியதால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற க.பரமத்தி போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்தில் சிக்கிய லாரிகளை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர்படுத்தினர்.
