Skip to content
Home » சட்டமன்ற தொகுதி தோறும் நீட் கோச்சிங் சென்டர் …. அரியலூரில் பாஜ.,வேட்பாளர் பிரசாரம்…

சட்டமன்ற தொகுதி தோறும் நீட் கோச்சிங் சென்டர் …. அரியலூரில் பாஜ.,வேட்பாளர் பிரசாரம்…

  • by Senthil

சோழ மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கு சிலை எடுப்பேன், சட்டமன்றம் தோறும் நீட் கோச்சிங் சென்டர் அமைப்பேன் என்ற உறுதிமொழிகளை அளித்து சிதம்பரம் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி அரியலூர் நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி தமிழகத்தில் முதல் கட்டமாக வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், நாம் தமிழர் வேட்பாளர் ஜான்சி ராணி உள்ளிட்ட 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வேட்பாளர்கள் அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி அரியலூர் நகரில் உள்ள 18 வார்டுகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். வீதி வீதியாக சென்று வாக்காளர்களிடம் தனக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பின்னர் அண்ணா சிலை அருகே பாஜக வேட்பாளர் கார்த்திகேயனின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது உங்களின் குரல், உங்களின் தேவைகளை நாடாளுமன்றத்தில் ஒலிப்பதற்காக இந்த தொகுதியில் இருந்து ஒருவரை இரண்டு முறை தேர்வு செய்து உள்ளீர்கள். அவர் உங்களது தொகுதிக்கும் வரவில்லை. பாராளுமன்ற அலுவலகத்தையும் திறக்கவில்லை. தேர்ந்தெடுக்கும் வேட்பாளர் உங்களின் குறைகளை, தேவைகளை கண்டறிந்து, நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். ஆனால் நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர், அரியலூர் மாவட்டத்தில் ஏதேனும் ஒரு திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசினார் என்று செய்தித்தாள்களில் படித்திருக்கிறீர்களா? தேர்தல் நேரத்தில் மட்டும் சமுதாயம் என்ற போர்வையை போர்த்திக்கொண்டு வருவார்கள். அவர்களிடம் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகள் பறந்து போய்விட்டது. எதை நம்பி உங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நீங்கள் கேட்க வேண்டும். சுய லாபம் சுய வளர்ச்சிக்காக மட்டுமே மக்களை சந்திக்க அவர்கள் வருகின்றனர். அவர்களால் யாரிடம் சென்று உங்கள் கோரிக்கைகளை எடுத்து கூறி நிறைவேற்ற முடியும்.

அதே நிலையில் பாஜக வேட்பாளரான என்னைத் தேர்ந்தெடுத்தால், பாரதப் பிரதமரிடம் நேரடியாக கொண்டு சென்று உங்களது திட்டங்களை அவரிடம் சமர்ப்பித்து என்னால் உறுதியாக நிறைவேற்ற முடியும். அதனால் எனக்கு ஒரு வாய்ப்பை நீங்கள் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் இந்த தேர்தலில் உங்களுக்கு 500 ரூபாய் வேண்டுமா, விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 6 ஆயிரம் ரூபாய் வேண்டுமா என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். பாரத பிரதமரை மூன்றாவது முறையாக நீங்கள் தேர்ந்தெடுத்தால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் 6 ஆயிரம் ரூபாய் 12000 ஆக உயர்த்தப்படும் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் தன்னை தேர்ந்தெடுத்தால் தொகுதி மக்களுக்கு தான் அளிக்கும் வாக்குறுதிகளாக, நீட் தேர்வு, ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு, குரூப் 4 தேர்வு ஆகியவற்றிற்கு பயிற்சி பெறுவதற்காக மாணவர்கள் சென்னை பாண்டிச்சேரி உள்ளிட்ட பெரும் நகரங்களுக்கு செல்ல வேண்டிய தேவைகளை தவிர்த்து, ஒவ்வொரு சட்டமன்றத்திலும் ஒரு கோச்சிங் சென்டர் அமைத்து தருவேன். சோழ மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு சிலை எடுப்பேன். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தொழிற்சாலைகளை உருவாக்குவேன். அரியலூர் நகரில் 30 ஆண்டுகளுக்கு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நவீன பேருந்து நிலையம் அமைத்து தருவேன். சுற்றுலா மேம்பாடு அடைய அனைத்து ஏற்பாடுகளையும் செய்வேன். அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் ஆலைகளில், காலியாக உள்ள சுண்ணாம்பு சுரங்களில் இயற்கை காடுகள் அமைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன் உள்ளிட்ட பல தேர்தல் வாக்குறுதிகளை பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி பொதுமக்களிடம் எடுத்துக் கூறி, தனக்கு இந்த தேர்தலில் பாஜக சின்னமான தாமரையில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட தலைவர் ஐயப்பன், பாமக பொறுப்பாளர்கள் ரவி, திருமாவளவன், சின்னதுரை, இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் அருள் கணேசன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொறுப்பாளர் புகழேந்தி, அரியலூர் மாவட்ட பாஜக துணைத் தலைவர் கோகுல் பாபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!