551 நகரங்களில் நடைபெறும் நீட் மறுதேர்வு; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம். மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நீட் (NEET-UG) மறுதேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மத்திய அரசு தேர்வை ரத்து செய்தது. இதையடுத்து தேசிய தேர்வு முகமை (NTA) இன்று மறுதேர்வை நடத்துகிறது.
இந்த மறுதேர்வு இந்தியா முழுவதும் 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நடைபெறுகிறது. சுமார் 22.7 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்க உள்ளனர். தேர்வை சீரான மற்றும் வெளிப்படையான முறையில் நடத்துவதற்காக 5,500-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வினாத்தாள் கசிவுக்கு பிறகு கடும் பாதுகாப்பு
கடந்த தேர்வில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து இந்த முறை தேசிய தேர்வு முகமை பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. சிசிடிவி கண்காணிப்பு, ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பு, ஜிபிஎஸ் வசதி கொண்ட வாகனங்கள் மூலம் வினாத்தாள்கள் பாதுகாப்பாக கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்வு முறைகேடுகளைத் தடுக்க 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 1.42 லட்சம் மாணவர்கள்
தமிழ்நாட்டில் 31 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 307 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 489 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். சென்னை நகரில் மட்டும் 43 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 21 ஆயிரம் மாணவர்கள் சென்னை மையங்களில் தேர்வை எழுதுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள்
தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறுகிறது. தேர்வர்கள் மதியம் 1.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் நுழைய வேண்டும். அதன்பிறகு வருபவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது. ஹால் டிக்கெட், அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மட்டுமே கொண்டு வர வேண்டும். செல்போன், ஸ்மார்ட் வாட்ச், எலக்ட்ரானிக் சாதனங்கள் உள்ளிட்டவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன. தேர்வுக்கான பேனா தேர்வு அறையிலேயே வழங்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நீட் தேர்வின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்குமா இந்த மறுதேர்வு?
வினாத்தாள் கசிவு சர்ச்சையால் பாதிக்கப்பட்ட நீட் தேர்வின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்கும் முக்கிய முயற்சியாக இந்த மறுதேர்வு பார்க்கப்படுகிறது. லட்சக்கணக்கான மாணவர்களின் மருத்துவக் கனவுகளை தீர்மானிக்கும் இந்த தேர்வு, எந்தவித முறைகேடும் இன்றி வெற்றிகரமாக நடைபெறுமா என்பது நாடு முழுவதும் கவனிக்கப்படும் முக்கிய விஷயமாக மாறியுள்ளது.
