Skip to content
Home » புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு…. திமுகவும் புறக்கணிக்கிறது

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு…. திமுகவும் புறக்கணிக்கிறது

தற்போதைய நாடாளுமன்றம் 96 ஆண்டுகள் பழமையானது. அதனால், புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, புதிய நாடாளுமன்றம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.புதிய நாடாளுமன்த்தை வருகிற 28-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். மக்கள் பணத்தில் கட்டப்பட்டது என்பதாலும், நாட்டின் முதல் குடிமகள் என்பதாலும் ஜனாதிபதி திரவுபதி முர்முதான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின.  மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி போன்றவர்கள் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டனர்.ஆனால் பா.ஜக இதை ஏற்கவில்லை. மோடி தான் திறந்து வைப்பார் என மத்திய அமைச்சர் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இந்து மகாசபையை கட்டமைத்த சாவர்க்கரின் பிறந்தநாள்  28ம் தேதி என்பதால் அந்த தேதியை பாஜக தேர்வு செய்து உள்ளது. இது எதிர்க்கட்சிகளுக்கு  மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, எம்.பி.க்களுக்கு நேற்று அழைப்பிதழ்கள் ஆன்லைனில் அனுப்பிவைக்கப்பட்டன. அதில், 28-ந் தேதி காலையில் இருந்து பூஜை, கீர்த்தனைகள், சடங்குகள் நடைபெறும் என்றும், பிற்பகலில் திறப்பு விழா நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. விருந்தினர்கள் அனைவரும் காலை 11.30 மணிக்குள் இருக்கையில் அமர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அழைப்பிதழை பெற்றவுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்களுக்குள் விவாதிக்க தொடங்கினர். கருத்தொற்றுமை கொண்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டன.  இதுதொடர்பாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:- புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. எனவே, திறப்பு விழாவை கூட்டாக புறக்கணிக்க வேண்டும் என்று பல்வேறு எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. முறைப்படியான அழைப்பிதழ் கிடைத்த பிறகு, இதுதொடர்பாக புதன்கிழமை (இன்று) இறுதி முடிவு எடுக்கப்படும். திறப்பு விழாவை கூட்டாக புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் சார்பில் கூட்டு அறிக்கை வெளியிடப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.  திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. டெரிக் ஓ பிரைனும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜாவும், புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை தங்கள் கட்சிகள் புறக்கணிப்பதாக முதன்முதலாக அறிவித்து விட்டன.

இப்போது திமுகவும் நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளது. மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா இதனை அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!