கரூர் – திண்டுக்கல் சாலையில் உள்ள வெங்ககல்பட்டி, திருமாநகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக காவிரி கூட்டு குடிநீர் வரவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் ஆழ்துளை கிணறு மோட்டார் பழுது ஏற்பட்டதால் தண்ணீர் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி பொதுமக்கள் 20க்கும் மேற்பட்டோர்

, காலி குடங்களுடன் கரூர் – திண்டுக்கல் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை ஓரமாக இருந்த தடுப்புகளை சாலை நடுவே வைத்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாந்தோணிமலை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
குடிநீர் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் சார்பில் உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் அவதிக்குள்ளாகினர்.
