தெலுங்கானாவில் கொடுத்த கடனை திருப்பி கேட்ட செவிலியர் 6 துண்டுகளாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். ஐதராபாத் மலக்பேட் மூசி நதியில் கடந்த 17ம் தேதி தலை மட்டும் தனியாக கிடந்ததை பார்த்து பொதுமக்கள் போலீசில் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அடுத்து 8 தனிப்படை அமைத்து கொலை செய்யப்பட்ட பெண் யார், கொலை செய்தது யார் என போலீஸ் தீவிர விசாரணை தொடங்கியிருக்கிறது. அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகள் ஆதாரமாக வைத்து விசாரணை செய்தபோது அப்பகுதியில் ஆட்டோவில் வந்த ஒரு நபர் பெண்ணின் தலையை வீசிவிட்டு செல்வது தெரியவந்தது.
அவர் யாரென விசாரித்தபோது ஐதராபாத்தில் உள்ள சாத்தானிய புறத்தை சேர்ந்த சந்திரமௌலி என்பது தெரியவந்தது. அந்த சந்திரமௌலியை விசாரணை செய்தபோது அவர் கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது. சந்திரமௌலி என்பவருக்கும் ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியக்கூடிய அனுராதா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளாக பழக்கம் இருந்துள்ளது. அந்த பழக்கத்தின் காரணமாக இருவரும் பேசிவந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சந்திரமௌலி வீட்டிலையே அனுராதா கீழ் தளத்தில் வாடகை எடுத்து தங்கி வந்துள்ளார்.
அனுராதா அனைவருக்கும் வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததாகவும் அவ்வாறு சந்திரமௌலி அனுராதாவின் ரூ. 7 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு ஆன்லைனில் வர்த்தகம் செய்து வந்துள்ளார். அதில் பெரும் நஷ்டம் ஏற்பட்ட நிலையில் அனுராதாவுக்கு உரிய நேரத்தில் பணத்தை கொடுக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அனுராதா சந்திரமௌலியிடம் கொடுத்த பணத்தை தர வேண்டும் என அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் கடந்த 12ம் தேதி இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சந்திரமௌலி தனது கீழ்தளத்தில் வசித்து வரக்கூடிய அனுராதா வீட்டிற்கு சென்று அவரை கொலை செய்ததோடு அந்த கொலையை மறைக்கும் விதமாக உடல் பாகங்களை 6 பாகங்களாக வெட்டி அவரது குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளார்.
இரண்டு நாட்கள் கழித்து தலையை மட்டும் ஒரு கவரில் வைத்து நேரடியாக நதியில் ஆட்டோவில் கொண்டு வந்து வீசி சென்றுள்ளார். மீதும் உள்ள உடல் பாகங்களை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த நிலையில் அதில் இருந்து துறுநாற்றம் வராமல் இருப்பதற்காக கற்பூரம் உள்ளிட்ட வாசனை திரவியங்களை வீடு முழுவதும் வைத்திருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து அனுராதா வீட்டில் இருந்த உடல் பாகங்களை அனைத்தையும் மீட்ட போலீசார் தொடர்ந்த சந்திரமௌலியிடம் விசாரணை நடத்தினர், இதில் அவர் செய்த கொலையை தெரியாமல் இருப்பதற்காக அனுராதா உயிருடன் இருக்கும் விதமாக அவர் உறவினர்களையும் அவரது மகளையும் நம்பவைக்கும் விதமாக செல்போனில் அனுராதா குறுஞ்செய்தி அனுப்புவது போன்று அவருடைய மகளுக்கும் உறவினர்களுக்கும் செய்தி அனுப்பியுள்ளார்.
அனுராதா மட்டும் தனியாக வசித்து வந்த நிலையில் அனுராதாவின் மகள் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகின்றார். அவர்கள் யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் கடந்த 10 நாட்களாக மூடி மறைத்து வந்த நிலையில் போலீசார் விசாரணையில் இந்த கொலை திட்டமிட்டு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த கொலைக்கு பிறகு இந்த உடல் பாகங்களை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் அனைத்து விடீயோக்களை பார்வையிட்டு அதன் பிறகு இந்த உடல் பாகங்களை அகற்றுவதற்கு சந்திரமௌலி திட்டமிட்டிருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.