Skip to content
Home » பிரின்சிபல் ஆபாச பேச்சு……..திருச்சி கிருஷ்ணா நர்சிங் கல்லூரியில் மாணவி தற்கொலை…..

பிரின்சிபல் ஆபாச பேச்சு……..திருச்சி கிருஷ்ணா நர்சிங் கல்லூரியில் மாணவி தற்கொலை…..

  • by Senthil

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த இருங்களூரில் உள்ள திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே கிருஷ்ணா நர்சிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 700க்கும் மேற்பட்ட மாணவிகள் பாரா மெடிக்கல், பார்மசி, நர்சிங், யோகா என பல பிரிவுகளில் படித்து வருகின்றனர்.மேலும் இக்கல்லூரியில் 250க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த கல்லூரியில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை கிழக்கு வளவு அரியூர்நாடு பகுதியை சேர்ந்த  முருகேசன், ஓமனா தம்பதியின்  மகள் சத்தியப்ரீத்தி ( 20).இந்த கல்லூரியில் இறுதியாண்டு நர்சிங் படித்து வந்துள்ளார்.

நேற்று மாணவி சத்தியப்ரீத்தி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் போலீசாருக்கும், இறந்த மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த லால்குடி டிஎஸ்பி  அஜய்தங்கம் இறந்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் கல்லூரியில் பணம் கட்ட சொல்லி நெருக்கடி கொடுப்பதாகவும்,தகாத வார்த்தைகளால் திட்டி இழிவு படுத்துவதாகவும் சக மாணவிகள் ,இறந்த மாணவியின் பெற்றோர் குற்றம் சாட்டினர்.கல்லூரி நிர்வாகம் மற்றும் முதல்வர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து  சக மாணவிகள் கூறியதாவது:

கல்லூரி விடுதியில் இருந்து அனுமதி வாங்கி வீட்டிற்கு சென்றால் கல்லூரி முதல்வர் ஆபாச வார்த்தைகளால் பேசுகிறார். இதை வீட்டில் சொன்னால் படிப்பு நின்று விடும் என்ற பயத்தினால் வீட்டிற்கு தெரிவிக்காமல் இருந்து வருகிறோம். மேலும் ஸ்காலர்ஷிப் பணத்தில் தான் படித்து வருகிறோம். ஸ்காலர்ஷிப் வரவில்லை என்றால் பணத்தை கட்டு என கட்டாயப்படுத்தி ஆபாச வார்த்தைகளில் கல்லூரி முதல்வர் பேசியதால் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த நர்சிங்  மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என கண்ணீர் மல்க சக மாணவிகள் தெரிவித்தனர்.

இறந்த சத்திய ப்ரீத்தி மாணவியின் தாய் கூறும் போது…
எனது மகள் கல்லூரி விடுதியில் தங்கி கல்வி உதவித் தொகையுடன் படித்து வந்தார்.உதவித்தொகை வருவதற்கு காலதாமதம் ஆவதால் என்னை பணத்தை கட்ட சொல்லி கட்டாயப்படுத்தி ஆபாசமாக கல்லூரி முதல்வர் பேர்ள் மோகன்ராஜ் தொலைபேசியில் பேசினார். இதுகுறித்து நான் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தெரிவித்ததின் பேரில் அவர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தெரிவித்தனர். அங்கு கல்லூரி முதல்வரை அழைத்து விசாரித்தும் உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கல்லூரி முதல்வர் எனது மகளை ஆபாசமாக பேசி திட்டி உள்ளார்.இதில் மனம் உடைந்து எனது மகள் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனது மகள் இறப்பிற்கு முழு காரணம் கல்லூரி முதல்வர் தான் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!