கரூரில் இறைச்சிக் கடைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு! 20-க்கும் மேற்பட்ட கடைகளில் முத்திரை இல்லாத எடை இயந்திரங்கள் பறிமுதல் – ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த கடை உரிமையாளரால் பரபரப்பு.
கரூர் மாவட்டத்தில் இறைச்சிக் கடைகளில் எடை போடுவதற்குப் பயன்படுத்தப்படும் தராசுகள் முத்திரை

இல்லாமல், எடைக் குறைவு (மோசடி) செய்வதாகவும், இதன் மூலம் பொதுமக்கள் ஏமாற்றப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார்கள் வந்துள்ளன.
இந்தப் புகார்களின் அடிப்படையில், இன்று தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் ஆறுமுகம், உதவி ஆய்வாளர் அகஸ்டின் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் தான்தோன்றிமலை, வெங்கமேடு, வாங்க பாளையம்,காந்திகிராமம், சுங்க கேட் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி, மீன் உள்ளிட்ட இறைச்சி விற்பனை செய்யும் 40-க்கும் மேற்பட்ட கடைகளில் எடை போடுவதற்குப் பயன்படுத்தப்படும் தராசுகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, 20-க்கும் மேற்பட்ட கடைகளில் பயன்படுத்தப்பட்ட எடை இயந்திரங்களில் உரிய முத்திரைகள் இல்லாதது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த எடை இயந்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே, தான்தோன்றிமலை பகுதியில் உள்ள ஒரு இறைச்சிக் கடையில் அதிகாரிகள் ஆய்வுக்குச் சென்றபோது, கடைக்குள் அதிகாரிகளை அனுமதிக்காமல் கடை உரிமையாளர் தடுத்து நிறுத்தினார். தொடர்ந்து, அதிகாரியுடன் வாக்குவாதத்திலும் அவர் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்கள் வாங்கும் இறைச்சியின் எடையில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், அதிகாரிகள் மேற்கொண்ட இந்த அதிரடி ஆய்வு கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
