அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியாக போட்டியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் கடந்த 23ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 16 எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட 6 மாநில முதல் மந்திரிகள் பங்கேற்றனர். இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் ஜூலை 13,14ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது, பெங்களூருவில் வரும் 17, 18 ஆகிய தேதிகளில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். பெங்களூருவில் நடக்கவிருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக காலையில் தகவல் வெளியான நிலையில் தேதிகள் மாற்றம் செய்யப்பட்டு பிற்பகலில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக்கட்சிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.