Skip to content
Home » சுந்தரேஸ்வரர் கோயிலில் கும்பகோணம் திருவடிக்குடில் சுவாமிகள் சாமிதரிசனம்..

சுந்தரேஸ்வரர் கோயிலில் கும்பகோணம் திருவடிக்குடில் சுவாமிகள் சாமிதரிசனம்..

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே மதகரம் அருள்தரும் மங்களாம்பிகை உடனாகிய அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று நடந்த மார்கழி திருப் பள்ளி எழுச்சியில் கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் நிறுவனர் தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.  பின்னர் அவர் கூறியதாவது… மார்கழி மாத அதிகாலை வழிபாடு என்பது மனித வாழ்வின் அடிப்படையான, உடல் தூய்மை, உள்ளத் தூய்மையில் தொடங்கி, இறை நம்பிக்கை, புத்துணர்வு, எதிர்கொள்ளும் திறன், பரோபகாரம் ,பிற உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல், சக மனிதர்களிடத்தில் ஒற்றுமை, சமத்துவத்துடன் கூடி வாழ்ந்தல், நட்புறவு, இயற்கை நலனில் ஈடுபாடு என்கின்ற பரந்த சிந்தனையோடு பக்தியின் தொடக்க நிலை, வளர்நிலை, பக்குவ நிலை, இருவினை ஒப்பு, சரணாகதி மற்றும் முத்திப்பேறு வரையிலும் நம்மை செலுத்துகிறது.
இவை அனைத்தையும் ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை மற்றும் மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவெம்பாவை பதிகங்கள், சிறு குழந்தைகளும் அறியும் வண்ணம் எடுத்துக் கூறுகின்றன.

இந்தப் பதிகங்களை நாம் அதிகாலையில், பாராயணம் செய்துக் கொண்டு, திருக்கோயில்களில் வலம் வந்து வழிபாடு செய்யும்போது, உள்ள அமைதி பெறுவதுடன், பருவ கால சீதோஷ்ன நிலைக்கு உடலும் தயாராகிறது.
மேலும், கோயிலின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள திருக்குளத்தை பார்வையிட்டார்.
“மொய்யார் தடம் பொய்கை புக்கு…”
“ஆர்த்த பிறவி துயர் கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன்.” என்று மாணிக்கவாசக சுவாமிகளும்
“குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ”
“உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்” என்று ஆண்டாள் நாச்சியாரும் மார்கழி மாதத்தில் தீர்த்தக் குளத்தில் குளிர்ந்த நீரில் நீராடுதல் குறித்து பாடுகிறார்கள்.
திருக்கோயில் தீர்த்தம் முக்கியத்துவம்
வாய்ந்தது. அந்த வகையில் குளத்தை நல்ல முறையில் பராமரித்து அதில் தாமரை பூக்கள் மலர்ந்துள்ள இயற்கை சூழலை பாதுகாக்கும் கிராமத்தினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினரை பாராட்டினார்.
சில கிராம கோயில்களில் முறையாக மார்கழி திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெற்றாலும் வழிபாட்டுக்கு பக்தர்கள் வருவதில்லை. எனவே இதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
இந்த மார்கழி மாதத்தில் பல்வேறு மாவட்ட கோயில்களுக்கும் சென்று தரிசனம் செய்வதையும் பஜனை மற்றும் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பதிகங்களைப் பாட குழந்தைகளுக்கு பயிற்சி கொடுத்து, பள்ளிகளில் போட்டிகள் நடத்தி பரிசளிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளோம். இது அவர்களை பக்தி நெறியில் ஊக்கப்படுத்தும்.

இந்து சமய அறநிலையத்துறை ஆண்டுதோறும் இது போன்ற போட்டிகள் நடத்தி பரிசளித்து வந்தாலும், போதிய அளவு மக்களைச் சென்றடையவில்லை. இந் நிலையில் வழக்கம்போல திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்பட்டு வந்த, கும்பகோணம் அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட பெரிய கோயில்களில் கூட இந்த ஆண்டு ஒப்பித்தல் போட்டிகள் நடத்தப்படவில்லை. இது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, வரும் காலங்களில் மார்கழி வழிபாட்டில் இன்னும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!