Skip to content
Home » பப்ஜி விளையாடிய போது காதல் .. 4 குழந்தைகளுடன் டில்லிக்கு வந்த பாகிஸ்தான் இளம்பெண்..

பப்ஜி விளையாடிய போது காதல் .. 4 குழந்தைகளுடன் டில்லிக்கு வந்த பாகிஸ்தான் இளம்பெண்..

பாகிஸ்தானின் கராச்சி நகரை சேர்ந்தவர் சீமா ஹைதர் (27). இவரது கணவர் சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கொரோனா காலகட்டத்தில் சீமா ஹைதர், ஆன்லைனில் பப்ஜி விளையாடியபோது டில்லி அருகேயுள்ள கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சினுடன் (22) அவருக்கு பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக சமூக வலைதளங்கள் மூலமாக காதலித்து வந்தனர். அவ்வப்போது நேபாளத்தில் நேரில் சந்தித்து வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து காதலர் சச்சினுடன் இந்தியாவில் நிரந்தரமாக தங்க திட்டமிட்ட சீமா ஹைதர், முதல் கணவரை பிரிந்து கடந்த மே மாதம் நேபாளம் வழியாக இந்தியாவுக்கு வந்தார். கடந்த 50 நாட்களாக டில்லியில் சச்சினின் வீட்டில்  வசித்து வந்தார். அவரது உடை, நடை, பேச்சில் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீஸில் தகவல் தெரிவித்தனர். போலீசார் தேடுவதை அறிந்ததும் சச்சினும், சீமா ஹைதரும் ஹரியாணாவுக்கு தப்பிச் சென்றனர். கிரேட்டர் நொய்டா போலீஸாரின் தேடுதல் வேட்டையில் சச்சினும், சீமா ஹைதரும் ஹரியாணாவில் நேற்று கைது செய்யப்பட்டனர். சீமா ஹைதருக்கு தஞ்சம் அளித்த சச்சினின் தந்தை நேத்ரா பாலும் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர் நிருபர்களிடம் கூறியதாவது.. எனக்கும் குலாம் என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. அடுத்தடுத்து 4 குழந்தைகள் பிறந்தன. கடந்த 2020-ம் ஆண்டில் இந்தியாவை சேர்ந்த சச்சினுடன் தொடர்பு ஏற்பட்டது. அவரோடு சேர்ந்து வாழ விரும்பினேன். கராச்சியில் எனக்கு சொந்தமான நிலத்தை ரூ.12 லட்சத்துக்கு விற்பனை செய்தேன். அந்த பணத்தின் மூலம் எனக்கும் 4 குழந்தைகளுக்கும் பாஸ்போர்ட், விசாக்களை பெற்றேன். டிராவல் ஏஜென்ட் மூலம் நேபாளம் செல்ல 5 டிக்கெட்டுகளை வாங்கினேன். பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து நேபாளத்துக்கு சென்றேன். அங்கிருந்து டெல்லிக்கு பேருந்தில் வந்தேன். வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் சச்சின் எனக்கு வழிகாட்டினார். அவரது வழிகாட்டுதலின்படி சச்சினின் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். 4 குழந்தைகளுடன் பயணம் செய்ததால் யாரும் சந்தேகப்படவில்லை என்றார். கிரேட்டர் நொய்டா போலீசார் சீமா ஹைதர், சச்சினிடம் இருந்து 4 செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் 4 பிறப்புச் சான்றுகள், 3 ஆதார் அட்டைகள், 6 பாஸ்போர்ட்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!