Skip to content
Home » ஜீயபுரத்தில் நம்பெருமாளுக்கு தயிர் அமுது படைத்தல் நடத்துவது ஏன்?

ஜீயபுரத்தில் நம்பெருமாளுக்கு தயிர் அமுது படைத்தல் நடத்துவது ஏன்?

  • by Senthil

ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம் அந்த வகையில் பங்குனிதேர்த் திருவிழா 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 7-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது – திருவிழாவை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

பங்குனி தேர்த்திருவிழாவின் 2ம் நாளான நேற்று நம்பெருமாள் ஜீயபுரம் சென்று பகல் முழுவதும் அங்கு இருந்தார். அவர் ஜீயபுரம்  சென்றதற்கான வரலாற்று சம்பங்கள் பல கூறப்படுவது உண்டு. அதில் முக்கியமான ஒரு  சம்பவத்தை பார்ப்போம்.

ரெங்கநாதரை சர்வ காலமும் நினைத்து வாழும் ஒரு மூதாட்டி  ஜீயபுரத்தில் வசித்து வந்தார்.  இளமையிலேயே கணவனை இழந்த அந்த  மூதாட்டிக்கு இரண்டே உறவுகள் தான். ஒருவர் ரெங்கநாதர், மற்றொருவர் அவளின் பேரன் ரங்கன். ஏழ்மையிலும் இறைவனை மறக்காத அந்த மூதாட்டி , சதா சர்வகாலமும் ரெங்கநாதரை நினைந்தே வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் அந்த மூதாட்டியின் பேரன்  காவிரி கரைக்கு சென்றான்.காவிரியில் இறங்கி குளித்தான். அப்போது திடீரென காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து  வந்து  பேரன் ரங்கன் இழுத்து செல்லப்பட்டான் .வெகு நேரமாகியும் திரும்பாத பேரனை எண்ணிமூதாட்டி  கவலைப்பட்டாள். ரெங்கநாத பெருமாளை தொழுது, அழுது காவிரி கரைக்கு சென்றாள். அதே வேளையில் காவிரி வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட  ரங்கன், ஸ்ரீரங்கம்  அம்மாமண்டபத்திற்கு அருகே கரை ஒதுங்கினான்.

உயிர் பிழைத்த ரங்கன், ஸ்ரீரங்கத்து பெருமாளை தரிசித்து காப்பாற்றியதற்கு நன்றி தெரிவித்து. தன்னை காணாது பாட்டி அழுவாள் என ரெங்கநாதரிடம் முறையிட்டான்.

காவிரியின் வெள்ளம் கண்டு அழுது புலம்பி கொண்டிருந்த மூதாட்டியை ஆறுதல் படுத்த நம்பெருமாள் புறப்பட்டார்.மூதாட்டி  அழுது கொண்டிருந்த ஜீயபுரத்து காவிரி கரை அருகே  குளித்து எழுந்த நிலையில்  பேரன் உருவில் ரங்கனாக வந்தார் நம்பெருமாள். பேரனை கட்டி மகிழ்ந்து வீட்டிற்கு கூட்டி சென்றார் மூதாட்டி . பசித்திருந்த பேரனுக்கு  பழைய சாதத்தில் தயிர் இட்டு பிசைந்து, மாவடுவும் அளித்து சாப்பிட சொன்னாள். நம்பெருமாள் சாப்பிட்டு கொண்டிருந்த அதே வேளையில் உண்மையான பேரன் ரங்கன் அங்கே வர பாட்டி திகைப்படைந்தாள்.

அப்போது நம்பெருமாள் சிரித்தப்படியே மறைந்தார். பக்தையை ஆறுதல் படுத்த வந்து தயிர் சோறும், மாவடுவும் சாப்பிட்டார் ரெங்கநாத பெருமாள். நேற்றும் ஜீயபுரம் வந்த நம்பெருமாளுக்கு  அதனை நினைவூட்டும் வகையில் அமுது ஊட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  இதனை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!