கல்வித்துறை இணை இயக்குனர் க.செல்வக்குமார் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஏப்ரல் 2023 இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு தொடர்பாக கல்வி மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களில் தங்கள் மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப விடைத்தாள்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பாடவாரியான எண்ணிக்கை விவரம் அனைத்து முகாம் அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டு உள்ளது. அந்த எண்ணிக்கைக்கு தக்கபடி மதிப்பீட்டு பணியை செய்து முடிக்க தேவையான ஆசிரியர்களின் எண்ணிக்கையினை சரியாக கணக்கிட்டு பாடவாரியான, பயிற்று மொழிவாரியான ஆசிரியர்களை உடனடியாக பணி விடுப்பு செய்து முகாம் பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் தமிழ் வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் தமிழ்வழி விடைத்தாள்களையும், ஆங்கில வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் ஆங்கில வழி விடைத்தாள்களை மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றத் தக்க வகையில், தங்கள் மாவட்டத்தில் அமையும் மதிப்பீட்டு முகாமில் பெறப்படும் பயிற்று மொழி வாரியான விடைத்தாள்களின் எண்ணிக்கைக்கு தக்க விகிதத்தில் ஆங்கிலம், தமிழ் வழிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை கணக்கிட்டு நியமனம் செய்து அனுப்பிட வேண்டும். முகாம் பணிக்கான அட்டவணையில் மதிப்பீட்டு பணி குறிப்பிட்டு உள்ள நாட்களுக்குள் திட்டமிட்டு தொய்வில்லாமலும், காலதாமதமில்லாமலும் நடைபெற வேண்டும்.
மேற்படி மதிப்பீட்டு பணியினை மேற்கொள்ள தங்களது ஆளுகைக்குட்பட்ட அரசு பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்தில் இருந்தும் 10-ம் வகுப்பு போதிக்கும் தகுதி வாய்ந்த பாட ஆசிரியர்களை தவறாமல் பணியில் இருந்து விடுவித்து தேர்வாளர்களாக நியமனம் செய்து மதிப்பீட்டுப் பணியினை மேற்கொள்ள அறிவுறுத்தி அனுப்பி வைக்க வேண்டும். எந்தவொரு பள்ளியில் இருந்தும் ஆசிரியர்கள் விடுபடாது கண்காணித்தல் வேண்டும். தனியார் பள்ளிகள் தங்களது ஆசிரியர்களை முகாம் பணிக்கு முழு எண்ணிக்கையில் அனுப்பி வைத்தால் மட்டுமே அப்பள்ளிக்கான தேர்வு முடிவு வெளியிடப்படும். எனவே ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கைப்பட்டியலை தவறாது சரி பார்த்து ஆசிரியர்கள் விடுபடாமல் வரவழைத்தல் வேண்டும். மேலும் ஒரு கல்வி மாவட்டத்தில் இரு முகாம்கள், மூன்று முகாம்கள் அமைக்கப் பெற்றிருப்பின் முகாம்களின் தேவைக்கேற்ப விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்கு எவ்வித குந்தகமும் ஏற்படாமல் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை சரிவர பிரித்து ஒதுக்கீடு செய்திட வேண்டும். மதிப்பீட்டு பணிக்கு நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு நாளைக்குள் (புதன்கிழமை) நியமன ஆணையினை தவறாமல் வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.