திருவனந்தபுரம் : பாலக்காடு மாவட்டம் நென்மாரா போத்துண்டி அருகே உள்ள திருத்தம்பாடம் என்ற பகுதியை சேர்ந்தவர் சுதாகரன் (55). இவரது மனைவி சஜிதா (45). இவர்களுக்கு அகிலா (20), அனஸ்வரா (18) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
சுதாகரனின் தாய் லட்சுமியும் (75) இவர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். சுதாகரன் திருப்பூரில் ஒரு பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் செந்தாமரை (64). இவரது மனைவி விலாசினி.
இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் செந்தாமரையை விட்டு விலாசினி பிரிந்து சென்று விட்டார். இது செந்தாமரைக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. இவர் அப்பகுதியை சேர்ந்த ஒரு ஜோதிடரை பார்த்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் நீளமான முடிகொண்ட ஒரு பெண் தான் உங்கள் மனைவி பிரிந்து சென்றதற்கு காரணம் என்று கூறியுள்ளார். சுதாகரனின் மனைவி சஜிதாவுக்கு நீளமான முடி இருந்தது. எனவே அவர்தான் தன்னுடைய மனைவி பிரிந்து சென்றதற்கு காரணம் என்று செந்தாமரை கருதினார். இதனால் சஜிதாவை கொல்ல அவர் திட்டமிட்டார்.
இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுதாகரனின் வீட்டுக்குள் புகுந்த செந்தாமரை, சஜிதாவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த நென்மாரா போலீசார், செந்தாமரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கில் பாலக்காடு மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம், செந்தாமரைக்கு இரட்டை ஆயுள் சிறை விதித்தது. இதைத் தொடர்ந்து அவர் பாலக்காடு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் கடந்த வருடம் செந்தாமரைக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. அப்போது நென்மாரா பஞ்சாயத்து பகுதிக்குள் நுழையக்கூடாது என்று அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.ஆனால் அதை மீறி செந்தாமரை தன்னுடைய வீட்டுக்கு சென்றார்.
மேலும் சுதாகரனுக்கு அவர் அடிக்கடி கொலை மிரட்டலும் விடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி தன்னுடைய வீட்டுக்கு அருகே நின்று கொண்டிருந்த செந்தாமரை, அந்த வழியாக வந்த சுதாகரனை தடுத்து நிறுத்தி அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே சுதாகரன் பலியானார்.
சத்தத்தைக் கேட்டு அங்கு வந்த தாய் லட்சுமியையும் செந்தாமரை சரமாரியாக வெட்டினார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட லட்சுமி பின்னர் மருத்துவமனையில் மரணமடைந்தார்.
இந்த சம்பவம் பாலக்காட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தாமரையை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பாலக்காடு மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி, செந்தாமரைக்கு மரண தண்டனையும், ரூ. 20 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். செந்தாமரை சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானவர் என்றும், அவரை வெளியே விட்டால் சுதாகரனின் 2 மகள்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
