Skip to content
Home » பட்டுக்கோட்டை வாலிபர் மலேசியாவில் கொலை…. திருச்சி வாலிபருக்கு தொடர்பா?

பட்டுக்கோட்டை வாலிபர் மலேசியாவில் கொலை…. திருச்சி வாலிபருக்கு தொடர்பா?

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை மன்னை நகரை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் விநாயகமூர்த்தி (வயது 37). இவருக்கு திருமணமாகி புகழேந்தி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளன. விநாயகமூர்த்தி கடந்த 11 மாதத்திற்கு முன்பு சுற்றுலா விசாவில் மலேசியா நாட்டிற்கு வேலைக்கு சென்றார். அங்கு இரும்பு கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இருந்தாலும் நிரந்தர விசா கிடைக்காமல் தவித்து வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் விநாயக மூர்த்தியின் செல்போன் எண்ணில் இருந்து பட்டுக்கோட்டையில் உள்ள அவரது தந்தை அன்பழகனுக்கு அழைப்பு வந்தது.

அதில் பேசிய நபர், உங்கள் மகனை உயிருடன் விடுவிக்க வேண்டும் என்றால் நான் சொல்லும் நபரிடம் ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும். பத்து ரூபாய் நோட்டில் உள்ள நம்பரை கூறி அந்த நோட்டை காண்பிப்பவரிடம் பணத்தைக் கொடுக்க வேண்டும். இதுகுறித்து யாரிடமும் கூறினால் கொன்று விடுவேன் என்று மிரட்டி பேசி உள்ளார். இதனால் அன்பழகன் செய்வதறியாது தவித்து வந்தார். மகன் நிலைமை என்ன ஆனது என்று தெரியாமல் தவித்தார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து வருவதாக கூறிய ஒருவர் பத்து ரூபாய் நோட்டை காண்பித்து ரூ.7 லட்சம் பணம் வாங்கி சென்றார்.

ஆனால் அதன்பின் மலேசியாவில் இருந்து பேசிய நபரிடம் இருந்தும், பணம் வாங்கி சென்ற நபரிடமிருந்தும் எந்தவித அழைப்பும் வரவில்லை. இந்நிலையில், மலேசியாவில் உள்ளூர் தொலைக்காட்சியில், விநாயக மூர்த்தி கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் உடல் உள்ளதாக செய்தி வெளியானது. இதுகுறித்து தகவல் அறிந்த அன்பழகன் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். பணம் பெற்றுக்கொண்டு விநாயகமூர்த்தியை விடுவிக்காமல் கொலை செய்துவிட்டனரே என எண்ணி கதறினர்.

இந்த நிலையில் மலேசியாவில் இருந்து விநாயகமூர்த்தி உடலை மீட்டுக்கொண்டு வர வேண்டும். கொலை செய்தவர்களையும் பணத்தை வாங்கி சென்றவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்தில் அன்பழகன் புகார் செய்தார். மலேசியாவுக்கு வேலைக்கு சென்ற இடத்தில் பட்டுக்கோட்டை வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியில் இருந்து வருவதாக கூறி ரூ.7 லட்சம் வாங்கிச்சென்ற நபர் திருச்சியை சேர்ந்தவர் தானா, அவர் யார்,  அவரது உருவம் அருகில் உள்ள  கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகி உள்ளதா என  பட்டுக்கோட்டை போலீசாரும் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் பட்டுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!