சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், பெரம்பூர் தொகுதியில் நாளை நடத்த திட்டமிட்டிருந்த பிரச்சாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் நேரில் புகார் அளித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய், இன்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு நேரில் சென்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்தார். பெரம்பூர் எம்.கே.பி. நகர் பகுதியில் காலை 10 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த பிரச்சாரக் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர் முறையான புகாரை அளித்தார்.
அந்த இடத்தில் 300 பேர் மட்டுமே கூடக்கூடிய சூழல் இருப்பதால், 3000 பேர் வரை கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறி தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்திருந்தது. இதனால் தவெக தரப்பு மாற்று இடம் கோரி விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தலைமைத் தேர்தல் அதிகாரியை சந்தித்த பிறகு விஜய், பிரச்சார அனுமதி மறுப்பு குறித்து தேர்தல் ஆணையத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார். தவெகவின் முதல் நாள் பிரச்சாரத்துக்கே அனுமதி சிக்கல் ஏற்பட்டுள்ளது, தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்படுவதை இது காட்டுகிறது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய்யின் நேரடி புகாருக்கு பிறகு, தேர்தல் அதிகாரிகள் இந்த விவகாரத்தை விரைவாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவெக தரப்பு மாற்று இடத்தில் பிரச்சாரம் நடத்த அனுமதி கோரி மேலும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

