தமிழகத்தில் சொத்துப் பதிவு சேவைகளை எளிமைப்படுத்தவும் கூட்ட நெரிசலைக் குறைக்கவும் 6 பதிவு மாவட்டங்களில் புதிய இணை சார்பதிவாளர் அலுவலகங்கள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
புதிய அலுவலகங்கள் அமையும் இடங்கள்
- சென்னை வடக்கு
- சென்னை தெற்கு
- மத்திய சென்னை
- கோவை வடக்கு
- தாம்பரம்
- செங்கல்பட்டு
இந்த இணை சார்பதிவாளர் அலுவலகங்கள் சம்பந்தப்பட்ட பதிவாளர் அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டு, அந்தந்த பதிவு மாவட்டங்களுக்கான மாதிரிப் பதிவு மையங்களாக (Model Registration Hubs) செயல்படும்.
பதிவுச் சட்டத்தின் பிரிவு 30-ன் கீழ் பதிவாளருக்கான அதிகாரங்களையும் கடமைகளையும் இந்த இணை சார்பதிவாளர்கள் மேற்கொள்வார்கள்.
பொதுமக்களுக்குப் பத்திரப்பதிவு தொடர்பான சேவைகள் ஒரே கூரையின் கீழ் விரைவாகவும் வசதியாகவும் கிடைக்க இந்த நடவடிக்கை வழிவகுக்கும்
அமைச்சர் லோகேஷ் சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 7, 2026 அன்று அறிவித்தபடி, பத்திரப்பதிவு தொடர்பான பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் வகையில் 25 மாடல் பதிவுச் சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக, சென்னை வடக்கு, சென்னை தெற்கு, சென்னை மத்திய, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் வடக்கு, தாம்பரம் ஆகிய 6 பதிவு மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்ட இணை சார்பதிவாளர் அலுவலகங்களை, சம்பந்தப்பட்ட பதிவாளர் அலுவலகங்களுடன் இணைத்து செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசாணை வெளியீடு
இதற்கான அரசாணை கடந்த நவம்பர் 26, 2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. மாடல் பதிவுச் சேவை மையங்களின் செயல்பாட்டுக்குத் தேவையான நிர்வாக அறிவுறுத்தல்களை வழங்க பதிவுத்துறை தலைவருக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.
மக்களுக்காக செய்யப்பட உள்ள வசதிகள்
இந்த மாதிரி மையங்கள் சாதாரண பதிவாளர் அலுவலகம் போல இல்லாமல் நவின வசதிகளுடன் அமைய உள்ளதாக கூறப்படுகிறது.
குளிர்சாதன வசதி கொண்ட காத்திருப்பு அறை
50 முதல் 100 பேர் வரை உட்காரும் வசதி
தானியங்கி இசைவு சரிபார்ப்பு கருவி
கண் மற்றும் கைரேகை வைத்து ஆதார் சரிபார்ப்பு
தொடுதிரை வசதி கொண்ட தானியங்கி இயந்திரம்
நவீன கணினிகள், அச்சு இயந்திரங்கள்
24 மணி நேர கண்காணிப்பு கேமரா
மின்சாரம் தடைபடாமல் ஜென்ரேட்டர்கள்
என பல வசதிகள் மக்கள் தேவைக்காவும் வசதிக்காவும் ஏற்படுத்தப்பட உள்ளது.
இந்த மாதிரி மையங்களில் சாதாரண பதிவு கட்டணத்துடன் கூடுதலாக 4 வகையான வசதிக்கட்டணம் வசூலிக்கப்படும் என கூறப்படுள்ளது.
சாதாரண சேவைக்கு – ரூபாய். 2,000
அவசர சாதாரண சேவைக்கு – ரூபாய். 5,000
சிறப்பு சேவைக்கு – ரூபாய். 5,000
அவசர சிறப்பு சேவைக்கு – ரூபாய். 10,000
இதில் வரும் பணத்தை அரசும், அதை நடத்தும் தனியார் நிறுவனமும் பங்கு போட்டுக் கொள்ளும். சாதாரண சேவையில் அரசுக்கு 80 விழுக்காடு, தனியாருக்கு 20 விழுக்காடு. அவசர சிறப்பு சேவையில் அரசுக்கு 65 விழுக்காடு, தனியாருக்கு 35 விழுக்காடு.
