Skip to content
Home » பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம்…

பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம்…

பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுத இருக்கின்றனர். சென்னை மாநகரில் மட்டும் 405 பள்ளிகளில் இருந்து 45 ஆயிரத்து 982 மாணவ-மாணவிகள் தேர்வை எழுத உள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3 ஆயிரத்து 225 இடங்களில் இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக 46 ஆயிரத்து 870 பேரும், மாணவர்கள் காப்பி அடிக்கிறார்களா? என்பதை கண்காணிக்க பறக்கும்படை, நிலையான படை உறுப்பினர்கள் 4 ஆயிரத்து 235 பேரும் பணியில் ஈடுபட உள்ளனர். புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புதாள்களுடன் முதன்மை விடைத்தாள்கள் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு அறையில் வழங்கப்படும். மாணவ-மாணவிகள் அதனை சரிபார்த்து கையொப்பமிட்டு, தேர்வை எழுத தொடங்கலாம் என்று கல்வித்துறை அறிவித்திருக்கிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெற இருக்கிறது. இதில் முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை படித்து பார்ப்பதற்கும், அடுத்த 5 நிமிடங்கள் தேர்வர்களின் விவரங்களை சரிபார்ப்பதற்கும், பின்னர் தொடர்ந்து 3 மணி நேரம் தேர்வை எழுதுவதற்கும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று தமிழ் தாள் தேர்வு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து ஒரு நாள் இடைவெளியில் நாளை மறுநாள் ஆங்கிலத் தேர்வு நடக்க இருக்கிறது. தொடர்ச்சியாக ஒவ்வொரு பாடப் பிரிவினருக்கும் தேர்வு நடத்தப்பட்டு, அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந் தேதி வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் ஆகிய தேர்வுகளுடன் பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவு பெற இருக்கிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!