Skip to content
Home » பிரிக்ஸ் மாநாடு… பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார்

பிரிக்ஸ் மாநாடு… பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார்

  • by Senthil

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.  கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக காணொலி காட்சி மூலம் நடந்து வந்த இந்த மாநாடு, இந்த ஆண்டு நேரடி நிகழ்வாக நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று புறப்பட்டு சென்றார்.

இதில் சீன அதிபர் ஜின்பிங், பிரேசில் அதிபர் உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். மேலும் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் வங்காளதேசம், இந்தோனேஷியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கிறார்கள். 24-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக உறுப்பு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் பொது கரன்சி உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. மேலும் பிரிக்ஸ் அமைப்பில் மேலும் சில நாடுகளை சேர்த்து விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

இந்த அமைப்பில் இணைவதற்காக சுமார் 23 நாடுகள் விண்ணப்பித்து இருப்பதால் அதுகுறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது. பிரிக்ஸ் அமைப்பில் கூடுதலாக நாடுகளை சேர்ப்பதற்கு இந்தியா ஆதரவு தெரிவித்து உள்ளது. பிரிக்ஸ் விரிவாக்கத்தை திறந்த மனதுடன் ஏற்பதாகவும், நேர்மறையாக அணுகுவதாகவும் வெளியுறவு அமைச்சக செயலாளர் வினய் குவாத்ரா நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதைப்போல சீனாவும் பிரிக்ஸ் விரிவாக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளது. ஒரு வெளிப்படையான மற்றும் உள்ளடக்கிய அமைப்பாக பிரிக்ஸ் இருப்பதை சீனா விரும்புவதாகவும், பிரிக்ஸ் பெரிய குடும்பத்தில் இணையும் ஒத்த கருத்துள்ள நாடுகளை வரவேற்பதாகவும் அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

சீன அதிபருடன் சந்திப்பா? இந்த நிலையில் பிரிக்ஸ் மாநாட்டை தொடர்ந்து பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினர் அல்லாத நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கும் ‘பிரிக்ஸ் – ஆப்பிரிக்கா அவுட்ரீச் மற்றும் பிரிக்ஸ் பிளஸ் உரையாடல்’ நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதற்கிடையே பல்வேறு நாடுகளின் தலைவர்களை நேருக்கு நேர் சந்திக்கும் பிரதமர் மோடி, அப்போது இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அவர்களு டன் ஆலோசனை நடத்துகிறார். எனினும் சீன அதிபர் ஜின்பிங்குடன் நேரடி சந்திப்பு நடைபெறுமா? என்பது குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இது குறித்த கேள்விக்கு வினய் குவாத்ரா பதிலளிக்கையில், ‘பிரதமர் மோடியின் இருதரப்பு சந்திப்புக்கான அட்டவணை இறுதி செய்யப்பட்டு வருகிறது’ என்று மட்டும் தெரிவித்தார். பிரிக்ஸ் உச்சி மாநாட்டை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி 25-ந்தேதி கிரீஸ் நாட்டுக்கு செல்கிறார். அங்கு கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிசை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து அவர் ஆலோசனை நடத்துகிறார். மேலும் இருநாட்டு வர்த்தக தலைவர்களை சந்தித்து பேசுவதுடன், அங்கு வாழும் இந்தியர்களுடனும் கலந்துரையாடல் நடத்துகிறார். பிரதமரின் கிரீஸ் பயணம் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகளை குறித்து விவாதிக்க இருதரப்புக்கும் வாய்ப்பளிக்கும் என வினய் குவாத்ரா தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!