மதுரை வண்டியூரை சேர்ந்தவர் ரவுடி வினோத். இவர் மீது மதுரையில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் அங்கு வந்த ரவுடி வினோத்தை விசாரித்ததாகவும் மதுரை மாட்டுத்தாவணி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அப்பொழுது போலீசாரிடம் இருந்து தப்பிக்க ரவுடி வினோத் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீசாரை தாக்க முயன்றார்.
இதனால் போலீசார் தற்காப்புக்காக ரவுடி வினோத்தை காலில் துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ரவுடி வினோத் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரவுடிகள் மீது தமிழக போலீசார் தொடர்ந்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். கோவை, திருச்சி, சென்னையை தொடர்ந்து இப்போது மதுரையிலும் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி ரவுடிகளின் கொட்டத்தை அடக்கி வருவதால், தமிழகத்தில் இனி ரவுடிகள் தலைதூக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் ரவுடிகள் மத்தியில் கிலிபிடித்து உள்ளது.