Skip to content
Home » முதல்வர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து….

முதல்வர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து….

  • by Senthil

இனிய பொங்கல் இந்தியப் பொங்கல் ஆகட்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். .. நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் பொங்கல் – தமிழர் திருநாள் வாழ்த்து மடல்.

உலகெங்கும் வாழும் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாகப் பொங்கல் நன்னாள் கொண்டாடப்படுகிறது. இது உழைப்பின் மேன்மையைப் போற்றும் திருநாள். உழுது விளைவித்து அறுவடை செய்த நெல்லை அரிசியாக்கிப் பொங்கல் வைத்து, அந்த விளைச்சலுக்குக் காரணமான இயற்கை ஆற்றலாம் சூரியனுக்கும், உழவுக்குத் துணையாய் இருந்த கால்நடைகளுக்கும் நன்றி செலுத்துகிற நன்னாள்! சாதி – மத பேதமற்ற சமத்துவத் திருநாள்! ஆரியப் பண்பாட்டுத் தாக்கம் ஏதுமின்றி, திராவிடர்களாம் தமிழர்களின் தனிச் சிறப்புமிக்க தொன்மைமிகு பண்பாட்டின் கொண்டாட்டமாக அமைந்திருப்பது தை முதல் நாளாம் பொங்கல் திருநாள்!

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் இழந்துவிடாத வகையில், கடந்த 2023-ஆம் ஆண்டு இறுதியில் தமிழ்நாடு எதிர்கொண்ட மிக்ஜாம் மழை – வெள்ள இயற்கைப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பதிலும் மீட்டெடுப்பதிலும் நமது திராவிட மாடல் அரசு அர்ப்பணிப்புடன் செயலாற்றியது. கடும் பேரிடர்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் புதுடெல்லியில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் நானே நேரில் சென்று வலியுறுத்தியபோதும், அத்தகைய அறிவிப்போ, தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கான நிதியோ வரவில்லையென்றாலும், நம் மக்களைக் காக்க வேண்டிய கடமையை உணர்ந்து, மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 6000 ரூபாய் நிதி வழங்கியதுடன், வீடுகளை இழந்த குடும்பத்தினர், படகுகள் சேதமான மீனவர்கள், உயிரிழப்புகளை எதிர்கொண்டவர்களின் குடும்பத்தினர், பயிர்கள் பாதிக்கப்பட்ட உழவர்கள்,

Pongal Wishes Images 2024 | பொங்கல் வாழ்த்து 2024

தொழில் முடங்கிய வணிகர்கள் எனப் பல்வேறு தரப்பினருக்கான நிவாரணத் தொகையையும் உயர்த்தி அறிவித்து வழங்கி வருகிறது திராவிட மாடல் அரசு. வணிகர்களுக்கான கடன் வழங்கும் முகாம்கள், முக்கியமான சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்கள் வழங்கும் முகாம்கள், நோய்த்தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான மருத்துவ முகாகம்கள் ஆகியவை தொடர்ந்து நடைபெற்றுள்ளன.

முதலமைச்சர் என்கிற பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான நான் இந்தப் பணிகளை மேற்கொண்ட வேளையில், என்னை முதலமைச்சராக்கிட அயராது உழைத்த அன்பு உடன்பிறப்புகளாம் தி.மு.கழகத்தின் நிர்வாகிகளும் தொண்டர்களும் அவரவர் பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, அவர்களின் துயர் துடைக்கும் கைகளாகச் செயல்பட்டீர்கள். கழகத்தினரின் இத்தகைய செயல்வேகம் குறித்த செய்திகள்தான் என்னுடைய பணிக்கு ஊக்கம் தரக்கூடியவை. மக்களுக்கான பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள உத்வேகம் அளிப்பவை.

நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, தமிழ்நாட்டு மக்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிடும் நடைமுறையைக் கொண்டு வந்தார். அந்த எதிர்பார்ப்பு இன்றளவும் மக்களிடம் இருப்பதை உங்களில் ஒருவனான நான் அறிவேன். அதனால்தான் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று திராவிட மாடல் அரசு அறிவித்தது. அத்துடன், ரொக்கத் தொகையும் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தை நான் அறிந்தேன்.

கடுமையான நிதி நெருக்கடி நிலவிய சூழலிலும் ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைப் புறந்தள்ளாமல் பரிசீலித்தேன். சர்க்கரை நாவில் இனிக்கும். ரொக்கப் பணம் மனதில் இனிக்கும் என்பதால் தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில் தமிழ்நாட்டுக் குடும்பங்களில் கூடுதல் மகிழ்ச்சி பொங்கிடும் வகையில் 2 கோடியே 19 இலட்சத்து 71 ஆயிரத்து 113 அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டு வருகிறது. ரொக்கத்துடன் கூடிய இந்த பரிசுத் தொகுப்புக்காக ஒதுக்கப்பட்ட தொகை 2,436.19 கோடி ரூபாய் ஆகும். அத்துடன் 1 கோடியே 77 இலட்சம் சேலைகளும் வேட்டிகளும் ஏழை – எளிய மக்களுக்கு பொங்கல் பரிசாக நியாய விலைக் கடைகள் மூலம் இந்த ஆண்டுதான் பொங்கலுக்கு முன்பே வழங்கப்படுகின்றன. இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் குடும்பத் தலைவியருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் ஆயிரம் ரூபாய், ஜனவரி 10-ஆம் தேதியே அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு, பொங்கலின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது நமது திராவிட மாடல் அரசு .  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!