Skip to content
Home » தமிழ்நாடு முழுவதும் பொங்கல் விழா …. உற்சாகத்துடன் கொண்டாட்டம்

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் விழா …. உற்சாகத்துடன் கொண்டாட்டம்

உழைப்பின் மேன்மையை உலகுக்கு உணர்த்தவும், விவசாயத்தின்  பலனை மக்கள் அனுபவிக்கும்  அறுவடை திரு நாளாகவும்,  உழவனின் வாழ்வில் ஒன்றாக கலந்த சூரியன், மற்றும் நீர்நிலைகளுக்கு நன்றி  தெரிவிக்கவும்  தைப்பொங்கல் விழாவை தமிழர்கள்   தொன்று தொட்டு கொண்டாடிவருகிறார்கள்.

அந்த  பொங்கல் திருநாள்  தை மாதம் 1ம் தேதி (இன்று)கொண்டாடப்படுகிறது.  பொங்கலை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே கடைத்தெருக்கள், சந்தைகளில் கூட்டம் நிறைந்து வழிந்தது.  பூஜைக்கு தேவையான கரும்பு, மஞ்சள்செடி, பூசணிக்காய் போன்றவற்றை நேற்றே வாங்கி வைத்துக்கொண்டனர். அதிகாலையிலேயே பெண்கள் தங்கள் வீடுகளில் பல வண்ண கோலங்களை போட்டு பொங்கல் பண்டிகையை வரவேற்றனர்.

அதேபோல விருந்தினர்களை வரவேற்கும் வகையில் வீட்டு வாசலில் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. மக்கள் காலையிலேயே குளித்து முடித்து புத்தாடைகளை அணிந்து கொண்டனர். பிறகு புதுப்பானையில் புத்தரிசியிட்டு சர்க்கரை பொங்கல் வைத்தனர். பொங்கல் பொங்கும்போது பொங்கலோ பொங்கல் என்று குலவையிட்டு வரயவேற்றனர். இதையடுத்து மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.  அத்துடன் பொங்கலையும் சாப்பிட்டு, தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கும் பொங்கல் கொடுத்து மகிழ்ந்தனர். இதேபோல் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், பல்வேறு கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளுடன் பொங்கல் விழாக்கள்  தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

பொது வெளியில் மக்கள் ஒன்றுசேர்ந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் இந்த திருவிழாக்கள், சமத்துவத்தை உலகிற்கு உணர்த்துவதாக உள்ளன. பொங்கல் பண்டிகை என்பதால், கோயில்களிலும் மக்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். இதனால் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து வழிகிறது.  தமிழ்நாடு மட்டுமின்றி தமிழர்கள் வாழும் இடங்கள் எல்லாம் பொங்கல் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழக மக்கள் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாட தமிழக அரசு  ரேசன் கடைகள் மூலம் ரூ.1000 ரொக்கம், ஒரு கரும்பு, சர்க்கரை,  பச்சரிசி மற்றும் வேட்டி, சேலையும் வழங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!