Skip to content
Home » பேராசிரியர் பொன்முடியின் வளர்ச்சியும், அமைச்சர் பொன்முடியின் வீழ்ச்சியும்

பேராசிரியர் பொன்முடியின் வளர்ச்சியும், அமைச்சர் பொன்முடியின் வீழ்ச்சியும்

  • by Senthil

1989-ம் ஆண்டு அமைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் தொடங்கி, 1996, 2006-ம் ஆண்டுகளில் அமைந்த திமுக ஆட்சியிலும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையிலும் மெத்தப் படித்த மேதாவி அமைச்சர் எனச் சொல்லும் வகையில்,எம்.ஏ., (வரலாறு), எம்.ஏ., (பொது நிர்வாகம்), எம்.ஏ., (சமூக அறிவியல்),பி.எட்., பி.ஜி.எல்., பிஹெச்.டி என முனைவர் பட்டம் வரை, பல பட்ட மேற்படிப்புகளுக்குச் சொந்தக்காரர் பொன்முடி (எ) தெய்வசிகாமணி.

நீளமான இந்தப் பட்டங்களைப் போட்டுத்தான் ஆரம்பகாலத்தில் தன்னைஅறிமுகப்படுத்திக்கொள்வார் பொன்முடி என்கிறார்கள் விழுப்புரம் உடன்பிறப்புகள். விழுப்புரம் மாவட்டம், டி.எடையார் கிராமத்தில் 1950-ம் ஆண்டு, ஆகஸ்ட்மாதம் 19-ம் தேதி பிறந்தவர் பொன்முடி. பொன்முடியுடன் பிறந்த சகோதர, சகோதரிகள் எட்டுப் பேர். அப்பா கந்தசாமி, சித்தலிங்கம் மடம் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிவர். தாய் மரகதமும் ஆசிரியையாகப்  பணியாற்றியவர்தான்.

பொன்முடிக்கு இரண்டு மகன்கள். மூத்தவர், பொன் கௌதமசிகாமணி. இவர் தற்போது எம்.பியாக உள்ளார். அடுத்தவர், பொன் அசோக் சிகாமணி.  இவர் தமிழ்நாடு கிரிக்கெட்  சங்க  தலைவராக இருக்கிறார். இருவருமே டாக்டர்கள்.

17 ஆண்டுக்காலம் கல்லூரிப் பேராசிரியர் பணியில் இருந்தவர் பொன்முடி. விழுப்புரம் கலைக் கல்லூரியில் பணியில் இருந்தபோது திராவிடர் கழக மேடைகளில் பேச்சாளராக அறிமுகமானவர். அரசியல் ஆர்வம் காரணமாக, தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு, தி.மு.க-வில் சேர்ந்தார்.

முதன்முதலாக 1989-ம்ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில்போட்டியிட்டு வெற்றிபெற்ற பொன்முடி, சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1991 தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியடைந்தார்.

1996-ல் அதே விழுப்புரத்தில் வெற்றிபெற்று தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துறைஅமைச்சர் ஆனார். பின்னர் 2001, 2006 தேர்தல்களிலும் விழுப்புரம் தொகுதியில் வெற்றி பெற்றார். 2006-2011 தி.மு.க ஆட்சியின்போது,உயர்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்புவகித்தார். பொன்முடியின்  அரசியல் அதிரடிகள்  ஜெயலலிதாவுக்கே அதிர்ச்சியை கொடுத்தது. எனவே  எப்படியும் பொன்முடியை தோற்கடிக்க வேண்டும் என திட்டமிட்ட ஜெயலலிதா 2011 சட்டமன்ற தேர்தலில்  அதிமுக  வேட்பாளராக சி. வி. சண்முகத்தை நிறுத்தினார்.  அந்த தேர்தலில்   பொன்முடி தோல்வி அடைந்தார்.
 அதன் பிறகு 2016 சட்டமன்றத் தேர்தலில் திருக்கோவிலூர் தொகுதிக்கு மாறி, வெற்றிபெற்றார்.விழுப்புரம் மாவட்ட திமுக செயலாளராகவும், மாநில திமுக துணைப் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்துவரும் பொன்முடி, இந்தச் சட்டசபைத் தேர்தலில் மீண்டும் திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, அமைச்சராகியிருக்கிறார். ஒன்றுபட்ட தென் ஆற்காடு மாவட்ட திமுக-வில் செல்வாக்கு படைத்த தலைவராக வலம் வந்த செஞ்சி ராமச்சந்திரன், வைகோ திமுக-விலிருந்து விலகியபோது அவருடன் சென்றார்.
எனவே விழுப்புரம் மாவட்ட திமுக-வில் பொன்முடி கிடு கிடுவென வளர்ந்தார்.  பொன்முடியின் அதிரடி நடவடிக்கைகள், பேச்சுகள் கருணாநிதிக்கு மிகவும் பிடித்து போயிற்று. எனவே அவர் கட்சியிலும் செல்வாக்கு பெற்றார்.  தற்போது  முதல்வர் ஸ்டாலினுடனும் நெருக்கமாக இருந்தார்.
 ‘கலைஞருக்கு ஒரு பேராசிரியர் அன்பழகன். தளபதிக்கு ஒரு பேராசிரியர் பொன்முடி’ என்று விழுப்புரம் உடன்பிறப்புகள் புகழும் அளவுக்கான அந்த நெருக்கம்தான், அவரை மாநில திமுக துணைப் பொதுச்செயலாளராகவும், அமைச்சராகவும் உயரம் தொடவைத்தது. அதே சமயம், மு.க.அழகிரி திமுக-வில் கோலோச்சிய 2006-2011 தி.மு.க ஆட்சிக்காலத்தில் அவருடனும் நெருக்கம் காட்டினார் பொன்முடி. தற்போது முதன்முறை அமைந்திருக்கும் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மீண்டும்  உயர்கல்வித்துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

இப்படி கட்சியிலும், ஆட்சியிலும்  கோலோச்சிய பொன்முடிக்கு  சொத்து குவிப்பு வழக்கு மூலம் பின்னடைவு  ஏற்பட்டு இன்று 3 ஆண்டு சிறைதண்டனைக்கு உள்ளாகி இருக்கிறார்.  இந்த தண்டனை மூலம் அவரது அவரது அமைச்சர் பதவி மற்றும்   எம்.எல்.ஏ.,  பதவி இரண்டும் காலியாகி விட்டது. எனவே   அவர் வெற்றி பெற்ற  திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும். இந்த  அவரது  அரசியல் வாழ்க்கையில் பின்னடைவாக கருதப்படுகிறது. எப்படியும் தனது சாதுரியத்தின் மூலம் மீண்டும்  சட்டத்தின் மூலம் தனது வழக்குகளை வென்று  மீண்டும் அரசியலில்  கோலோச்சுவாரா என்பதற்கு வரும் காலம் தான் விடையளிக்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!