Skip to content
Home » பூண்டி கலைவாணனுக்கும் மந்திரி பதவி கொடுங்கள்…..திருவாரூரில் போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பு

பூண்டி கலைவாணனுக்கும் மந்திரி பதவி கொடுங்கள்…..திருவாரூரில் போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பு

தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் விடுவிக்கப்பட்டு புதிய அமைச்சராக டி.ஆர்.பாலு எம்.பி.யின் மகன் டி.ஆர்.பி.ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏக்களுக்கும் அமைச்சர் பதவி தங்களுக்கு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி ராஜா, திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன் ஆகியோரது பெயர்களே இதில் அதிகம் அடிபட்டன.

இந்த நிலையில் டி.ஆர்.பி. ராஜாவை அமைச்சராக்கும் முடிவுக்கு எதிராக திருவாரூர் மாவட்ட தி.மு.க.வினர் மற்றும் திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அவர்கள் ஒட்டிய போஸ்டகள் சமூக வலைதளங்களில் வலம் வந்துகொண்டு இருக்கிறது. அதில், “திருவாரூர் மாவட்டத்தை திமுக கோட்டையாக மாற்றி கழகத்திற்கும் மக்களுக்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்த எங்கள் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் அவர்களுக்கும் ஒரு அமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும். கழகத்திற்காக நாங்கள் இல்லை எங்கள் கலைவாணனுக்காக மட்டும் தான் கழகத்தில் நாங்கள் இருக்கோம்.” என்று அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்த போஸ்டரை பூண்டி கலைவாணனுக்கு நெருக்கமானவர்களே அதிகளவில் பேஸ்புக்கில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் பூண்டி கலைவாணனின் மகன்கள் கலை,அமுதன் ஒரு பதிவை பேஸ்புக்கில் பகிர்ந்து இருக்கிறார்கள். அதில், “நேற்று அப்பாவிடம் கழக உறுப்பினர்கள்: நம் மாவட்ட கழகத்திற்காக அனைத்து கஷ்டங்களையும் இஷ்டப்பட்டு செய்றீங்க! எவ்வளவு செலவு? போராட்டம், ஜெயில் ஆனால் அங்கீகாரம் வேறொருவருக்கா?

அப்பாவின் பதில்: நம் வீட்டிற்கு வேலி நான் கட்டாமல் வேறு யாரு கட்டுவாங்க னு நினைத்து கொண்டு இருக்கமுடியும் என்றார். நம் மாவட்ட கழகத்தை தன் வீடாக நினைக்கும் இவர் மனதிற்கு நல்லதே நடக்கும். நீங்கள் என் இணையற்ற ஹீரோ.” என்று குறிப்பிட்டு உள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!