திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் செங்கம் சாலையிலிருந்து நிருதி லிங்கம் வரை 2.5 கிலோ மீட்டர் வரை மின்தடை ஏற்பட்டதால் பக்தர்கள் இருளிலேயே கிரிவலம் மேற்கொண்டனர்.
திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழா இன்று தொடங்க இருக்கும் நிலையில், நேற்றிரவு கிரிவலப் பாதையில் மின்சாரம் இல்லாததால் கிரிவலம் சென்ற பக்தர்கள் அவதியடைந்தனர். மின் வெட்டு துண்டிப்பால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.
குறிப்பாக, செங்கம் சாலையில் இருந்து நிருதி லிங்கம் கோயில் வரை சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்சாரம் இல்லாததால் செல்போன் வெளிச்சத்திலும், செல்லும் வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சத்திலும் பக்தர்கள் கிரிவலம் நடந்தனர்.
திடீர் இருள் சூழ்ந்ததால், எதிரே வருபவர்கள் யார் என்று தெரியாமலும், பாதுகாப்பு அச்சத்தினாலும் பக்தர்கள் தங்கள் மொபைல் போன் டார்ச் விளக்குகளைப் பயன்படுத்தியபடி சிரமத்துடன் கிரிவலம் மேற்கொண்டனர்.
