திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ‘பிரணவ் ஜூவல்லர்ஸ்‘ என்ற நகைக்கடை செயல்பட்டு வந்தது. மதுரை, தஞ்சை, சென்னை தமிழ்நாட்டின் பல இடங்களில் கிளைகள் தொடங்கப்பட்டது.

இந்த கடை தொடங்கப்பட்ட சில வருடங்களிலேயே போலியான கவர்ச்சியான விளம்பரங்களால் வாடிக்கயைாளர்களை கவர்ந்தது. நடிகர் பிரகாஷ் ராஜ் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை,. உங்கள் பழைய நகைகளை எங்களிடம் டெபாசிட் செய்து ஒரு வருடத்தில் அதே எடைக்கு புதிய நகை வாங்கிக்கொள்ளுங்கள். அத்துடன் 9 சதவீத வட்டிக்கு தங்க காசுகளும் வழங்கப்படும் என பல அறிவிப்புகளை வெளியிட்டனர். அத்துடன் நகை சீட்டுகளும் நடத்தினர். இதனால் வாடிக்கையாளர்கள் தங்களிடம் இருந்த நகை, பணத்தை பிரணவ் ஜூவல்லர்சில் கொட்டினர். கோடிகோடியாக குவிந்தது பிரணவ் ஜூவல்லர்சில்.
இந்த பணத்தை அதன் உரிமையாளர் மதன் செல்வராஜ், பங்குதாரரும், மதன் மனைவியுமான கார்த்திகா வேறு பல தொழில்களில் முதலீடு செய்ததாக தெரிகிறது. அதில் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதால் மதன் ஒவ்வொரு கடைகளாக இழுத்து மூடிவிட்டு தலைமறைவானார். இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கயைாளர்கள் கடைகள் முன் திரண்டு கண்ணீர் விட்டு அழுதனர். சிலர் சாபமிட்டனர். பலர் ஆங்காங்கே போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மதன், கார்த்திகாவை தேடி வந்தனர்.
இதற்கிடையே மதன் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் தான் வாடிக்கையாளர்கள் செலுத்திய பணத்தை திருப்பி செலுத்திவிடுவேன் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் கடைகள் தொடர்ந்து மூடிக்கிடந்ததாலும், அவரது வீடு மூடிக்கிடந்ததாலும் அவர் வெளிநாடு தப்பி ஓடிவிட்டார் என தகவல் பரவியது. இதற்கிடையே மதன் குடும்பத்தோடு தப்பி ஓடிவிடாதபடி லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டது.
இந்த நிலையில் மதன், கார்த்திகா சார்பில் மதுரை ஐகோர்ட் கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது வாடிக்கையாளர் செலுத்திய பணத்தை சுமூகமான முறையில் திருப்பி செலுத்திவிடுகிறேன் என அவர் வாக்குறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கை சமரச தீர்வு மையத்துக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.